முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்!
28 May 2026, 9:27 pm

முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்!

சென்னை, மே 28 - இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தனி விமானம் மூலம் வியாழக்கிழமை (மே 28) சென்னை திரும்பினார்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தில்லி சென்ற ச. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை, புதன்கிழமை (மே 27) அன்று இரவு சந்தித்தார். மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனும் சந்திப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அதேநேரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் ஓசூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விஜய் - ராகுல் சந்திப்பு ரத்து

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை, முதலமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை யன்று சந்திப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் சென்னை திரும்பினார்.

கர்நாடக முதலமைச்சர் மாற்றம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பிஸியாக இருந்ததால், விஜய் உடனான சந்திப்பு ரத்தானதாக காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் தெரிவித்தார். ஜூன் 11 அன்று மீண்டும் தில்லி செல்லும் முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திப்பார் என்றும் திலக் கூறினார்.