"ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் முதல் ஒலிம்பிக் நகரம் வரை" - முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்!
yesterday

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் விதி எண் 110-இன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதை ஊக்குவிக்க சென்னையில் 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' அமைக்கப்படும்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பல நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்ய விரும்புகின்றன. தமிழ்நாடு வலுவான ஆட்டோமொபைல் உற்பத்தி கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இங்கே உலகளாவிய மோட்டார் வாகனப் பந்தயங்களுக்கான அமைப்புகளை உருவாக்குவதற்கான தேவை உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் புதிதாக 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' உருவாக்கப்படும்.

சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம் இங்கே அமைக்கப்படும். ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை 400 ஆண்டுகள் பழமையானது. 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் பயன்பாட்டுக்காக 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மற்ற இடங்கள் அத்தனையும் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தலைமைச் செயலகம் ஜார்ஜ் கோட்டை, நாமக்கல் கவிஞர் மாளிகை என இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.