பொது விநியோகத் திட்டத்தைச் சீர்குலைக்கும் பதிவாளர் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக: சிஐடியு
1 hour before

பொது விநியோகத் திட்டத்தைச் சீர்குலைக்கும் பதிவாளர் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக: சிஐடியு

சென்னை, நவ.23 – நியாயவிலைக் கடைகளின் காலிப் பணியிடங்களை வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு ரூ.400

இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மு. துரைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை மாவட்ட ஆட்சேர்ப்பு மையம் மூலம் நிரப்பப்பட்டு வந்த காலிப் பணியிடங்களை, நாளொன்றுக்கு ரூ.400, மாதம் ரூ.7,500-க்கு மிகாமல் என்ற ஊதியத்தில் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நிரப்ப, 12.11.2026 தேதியிட்ட பதிவாளர் சுற்றறிக்கை (எண் 26/2026) ஆணையிட்டுள்ளது. மக்களுடன் அன்றாடம் தொடர்புடைய நிரந்தரத் தன்மை கொண்ட பணியில் இவ்வாறு நியமனம் செய்வது, பொது விநியோகத் திட்டத்தைச் சீர்குலைக்கும் தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கை. கடந்த காலங்களில் சுய உதவிக் குழுக்கள் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். திட்டம் சீர்குலைந்தால் உணவுப் பொருட்கள் கள்ளச் சந்தைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

2.20 கோடி குடும்ப அட்டைகள்

நாட்டிலேயே பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. கூட்டுறவுத் துறையின் கீழ் மட்டும் 25,000 முழுநேர, 11,000 பகுதிநேரக் கடைகள் என 36,000 நியாயவிலைக் கடைகள் மூலம் 2.20 கோடி குடும்ப அட்டைகளுக்குப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாநில மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் இத்திட்டத்தில், இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களும், அரசின் பல நலத்திட்டங்களும் இக்கடைகள் மூலமே வழங்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கின்போது உயிரைப் பொருட்படுத்தாமல் வீடு தேடிச் சென்று பொருட்களை விநியோகித்த ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக அரசால் பாராட்டப்பட்டனர். எனவே, தமிழக அரசு உடனே தலையிட்டுப் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு சம்மேளனம் தெரிவித்துள்ளது.