குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய சிஐடியு கோரிக்கை
2 Sept 2026, 10:40 pm

குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய சிஐடியு கோரிக்கை

மேட்டுப்பாளையம், செப்.2-மேட்டுப்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்காக போராடிய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அம்மனுவில், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவது தொடர்பாக சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு வரவேற்புக்குரியது. மேட்டுப்பாளையம் மக்களுக்கு தூய குடிநீர் வழங்கும் விளாமரத்தூர் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக 21 சமூக ஆர்வலர்கள் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் வலியுறுத்திய விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி பணிகளை நிறைவேற்றியதுடன், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது ஏராளமான மக்களுக்கு தூய குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற எண் 1259/2020, எஸ்.டி.சி. 40/2021 வழக்கை பொதுநலன் கருதி உடனடியாக திரும்பப்பெற சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், பவானி ஆற்றை ஆலை மற்றும் சாக்கடை கழிவுகளிலிருந்து பாதுகாக்க அரசு அதிகாரிகள், அனைத்துக் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.