தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புரட்சியை பாதுகாப்போம், கியூபாவை பாதுகாப்போம்! - கே.ஆறுமுகநயினார்

3 Oct 2026, 9:22 pm
புரட்சியை பாதுகாப்போம், கியூபாவை பாதுகாப்போம்! - கே.ஆறுமுகநயினார்

புரட்சியை பாதுகாப்போம், கியூபாவை பாதுகாப்போம்! - கே.ஆறுமுகநயினார்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகியுள்ள கியூபாவிற்கு ஆதரவாக சிஐடியு நாடுமுழுவதும் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து, கியூப ஆதரவு நிதியும் வசூலித்தது. கியூபாவிற்கு நேரடியாகச்சென்று ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்க, சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம் தலைமையில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் கே. ஆறுமுகநயினார் (தமிழ்நாடு),இந்திராணி முகர்ஜி (மேற்கு வங்கம்) ஆகியோர் சென்றனர்.

விமான நிலையத்தில் இடையூறு

17.9.2026 அதிகாலை 3.55 மணிக்கு ராயல் டச் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. 12 மணிக்கேவிமான நிலையம் சென்று பயண அனுமதிச் சீட்டைக் (போர்டிங் பாஸ்) கேட்டபோது, பிரான்ஸ் ஏர்லைன்ஸ்அதிகாரிகள் எங்களது விசாவை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எதற்காகக் கியூபா செல்கிறீர்கள், வெவ்வேறுமாநிலத்தைச் சேர்ந்த உங்களுக்குள் என்ன தொடர்பு, சுற்றுலா விசா வைத்துக்கொண்டு ஏன் கியூபா செல்கிறீர்கள்என நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். எங்களை வழியனுப்ப வந்திருந்த கியூப தூதரக அதிகாரி லூயி, விமானஅதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேசி, தனது கைபேசியில் விசா விவரங்களைக் காட்டி அதன்உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தினார். நீண்ட போராட்டத்திற்குப் பின் இரவு 3.00 மணிக்குப் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு, கடைசி நேரத்தில் விமானத்திற்குள் செல்ல முடிந்தது. நாம் கியூபா செல்வதையே விரும்பாத ஒருஅணுகுமுறையின் வெளிப்பாடாகவே இச்சம்பவம் இருந்தது — ஏகாதிபத்திய நாடுகளின் விமான நிறுவனங்கள் கூட கியூபா ஆதரவாளர்களை எவ்வளவு சந்தேகக் கண்ணோடுநோக்குகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஹவானா முதல் நாள்

18.9.2026 காலை கியூபா சென்றடைந்தோம். 3 நாட்கள் மட்டுமே கியூபாவில் இருந்ததால், அன்றே ஹவானா நகரைச் சுற்றிப் பார்த்தோம் — மே தின அணிவகுப்பு நடைபெறும் புரட்சி சதுக்கம், நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களையும், தெருக்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்என்பதையும் நேரில் கண்டோம். மாலை நேரத்தில் தெருக்கள் தோறும் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இசையும் நாட்டியமுமாகப் பொழுதைக் கழித்தனர்; ஸ்பானியரும் கருப்பினமக்களும் ஒன்று கலந்து வாழ்வதைக் கண்டோம்.

கியூப மத்திய தொழிற்சங்க பேரவையில் ...

மறுநாள் காலை கியூபா மத்திய தொழிற்சங்க பேரவை (CTC) அலுவலகத்திற்குச் சென்றோம். ஆசிய பசிபிக் அரசியல் பிரிவு தலைவர் லிவிசினா லேப்ட்ஸ்ஜெரியா எங்களை வரவேற்றார். 6 மாடிக் கட்டிடத்தின் 6ஆம் மாடியில் உள்ள கலந்துரையாடல் கூடத்திற்குமின்தடையால் லிஃப்ட் இயங்கவில்லை; படியேறியே சென்று கலந்துரையாடலை நடத்தினோம். பொதுச்செயலாளர் இங்கிலாந்து பயணத்தில் இருந்ததால், தேசிய செயற்குழு உறுப்பினர்ஜோஸ் அந்தோனியா பெரிஸ், சர்வதேச உறவுகள் துறைத் தலைவர் ஜெர்டிரியூஸ் சிமான் பினீடா, லிவிசினா ஆகியோர் கொண்டகுழுவுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.1939இல் தொடங்கப்பட்ட தங்கள் சங்கம் நீண்ட போராட்டத்திற்குப் பின் 1959 புரட்சி வெற்றிக்குப் பிறகேஅதிகாரத்திற்கு வந்ததாகவும், தொழிலாளர் உரிமை பாதுகாப்பு, வாழ்வாதார உயர்வு, தொழிலாளர் ஆதரவுச்சட்டங்களைக் கொண்டுவருவது ஆகியவையே தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டதாகவும் அவர்கள் விளக்கினர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது கடுமையான மின்சாரத் தட்டுப்பாடுநிலவுவதாகவும் தெரிவித்தனர். தற்போது 15 தொழிற்சங்கங்கள் இணைந்த 20 லட்சம்

உறுப்பினர்களும் 80,000 கிளைகளும் கொண்டதாக விவரித்தனர்; 70 லட்சம் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். நாட்டின் மின்சாரத் தேவை 3,200 மெகாவாட்என்றிருக்க, தற்போது மூன்றில் ஒரு பங்கே உற்பத்தியாகிறது; 1,500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நிலையங்கள் இயங்கவில்லை. ஜனவரியில் தொடங்கிய சோலார்திட்டத்திற்குச் சீனா 500 மெகாவாட் உதவியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்காவால் கடத்தப்பட்டதையடுத்து அங்கிருந்து பெட்ரோலியம் வருவதும் நின்றுவிட்டது. கேன்சர் மருந்து கண்டுபிடித்திருந்தும் அதற்கான மூலப்பொருள் கிடைக்கவில்லை; உலக நாடுகள் அனுப்பும் உதவிப் பொருட்களும் தடைசெய்யப்பட்டு 7,000கண்டெய்னர்கள் கரீபியன் கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை மேம்படுத்த கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநாட்டில் தயாரிக்கப்பட்ட மாற்றுத்திட்டங்களையும் அவர்கள் விளக்கினர். தோழர் எளமரம் கரீம், இந்திய தொழிலாளர்களின் முழு ஒருமைப்பாட்டை உறுதி செய்தார்;நாடு முழுவதும் வசூலித்த நிதியை வழங்கினோம், நெகிழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவுற்றது. பிரெஞ்சு தொழிற்சங்கம் அன்பளிப்பாக அளித்த சோலார்பேனலையும் — மின் உற்பத்திக் கருவியாக அல்ல, பிரெஞ்சு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை அடையாளமாக — எங்களுக்குக் காட்டினர்.

மருத்துவமனைச் சந்திப்பு

19.9.2026 காலை ஹவானாவின் இதயநோயியல் மற்றும் இதய ரத்தநாள அறுவைசிகிச்சை ஆராய்ச்சி மையத்திற்குச் சென்றோம்; மருத்துவமனையின் தலைவர், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர் சங்க நிர்வாகிகள் எங்களை வரவேற்று, மருத்துவமனையின் பணிகளையும் வசதிகளையும் விரிவாக விளக்கினர். முழுமையான மருத்துவக் கட்டமைப்பு இருந்தும் உபகரணப் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவமனைத் தலைமை விளக்கியது; நாம் கொண்டு சென்ற மருந்துப் பட்டியலில் இதய நோய் தவிர்த்த பிற மருந்துகளைப் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்புவதாகக் கூறினர். உதவியாளர் திருமதி கேண்டி, 200–250 குடும்பங்களுக்கு ஒரு மருத்துவரும் ஒரு செவிலியருமாக இயங்கும் குடும்ப மருத்துவத் திட்டத்தை விளக்கினார் — குடும்ப மருத்துவரே ஒவ்வொரு குடும்

பத்தின் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பு, தேவைப்பட்டால் வீட்டிற்கே வந்து சிகிச்சையும் அளிப்பர். அனைவருக்கும் மருத்துவம் இலவசம் என்பதும், மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பது அரசின் சட்டப்பூர்வப் பொறுப்பு என்பதும் கியூப அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக, நோட்டு–எழுதுபொருள் உட்பட அரசேவழங்குவதாகவும் தெரிவித்தார். பின்னர் தனிப்பட்ட முறையில் ஹவானா தெருக்களில் சுற்றி, பலதரப்புமக்களுடன் பேசியபோது, நிலவும் சிரமங்களை மக்கள் புரிந்தே இருப்பதும், அமெரிக்கா மீது கடும் கோபத்துடன்அரசு நடத்தும் போராட்டத்தோடு இணைந்து நிற்பதும் தெரியவந்தது.

பொருளாதாரத் தடையின் கடும் விளைவுகள்

சின்னஞ்சிறிய தீவு நாடான கியூபாவில் கரும்புத் தோட்டங்களே முக்கிய விவசாயம்; உணவுத் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதியையே நம்பியுள்ளது. வெளிநாட்டிலிருந்து பொருட்கள் வாங்க டாலர் தேவை; ஆனால் அமெரிக்கத் தடையால் டாலரில் வர்த்தகம் செய்ய முடியாமல், அனைத்து வணிக நிறுவனங்களும் பொருட்களுக்குப் பதிலாக நேரடியாக டாலரையே கேட்கும் நிலை உருவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ மாற்றுவிகிதம் 27 பெசோ = 1 டாலர் எனினும், தேவை காரணமாக 700 பெசோ = 1 டாலர் என உள்நாட்டு நாணயம் செயலிழந்துள்ளது. பலநாடுகள் உதவ முன்வந்தாலும் பொருளாதாரத் தடை அதற்கும் இடையூறாக உள்ளது; தற்போது மின்தேவையில் 30 சதவீதம் மட்டுமே சீன உதவியுடனான சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கிறது. இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் அரசுடன் இணைந்து நிற்கும்கியூப மக்களின் உறுதி, ஏகாதிபத்தியம் ஆயுதத்தாலும் பட்டினியாலும் நடத்தும் இரட்டைத் தாக்குதலுக்கு எதிரான வலிமையான பதில். உலக மக்கள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏகாதிபத்தியம் ஒருபுறம் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது, மறுபுறம் பொருளாதார முற்றுகை மூலம் பட்டினி போட்டுப் பணியவைக்க முயல்கிறது. இந்த இரட்டைத் தாக்குதலைஎதிர்கொண்டு, புரட்சியைப் பாதுகாப்போம், தாயகத்தைப் பாதுகாப்போம் என்றமுழக்கத்துடன் நிற்கும் சோசலிச கியூபா வெற்றி பெறட்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.