சிற்றாறு, பாப்பான் கால்வாயில் தூர்வாரும் பணி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி
28 Oct 2026, 8:38 pm

சிற்றாறு, பாப்பான் கால்வாயில் தூர்வாரும் பணி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி, அக்.28-தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் விவசாயத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிற்றாறு மற்றும் பாப்பான்கால்வாயில் பொதுப்பணித்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரும் கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணைகளில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரும் சிற்றாறு வழியாகப் பாப்பான்கால்வாயை வந்தடைகின்றன. இந்த நீர் விவசாய நிலங்களுக்குத் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணியின் ஒரு பகுதியாக, கால்வாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் மற்றும் நீரோட்டத்திற்குத் தடையாக உள்ள செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள மண் திட்டுகள், கழிவுகள் உள்ளிட்டவையும் அகற்றப்பட்டு, நீரோட்டம் சீராகச் செல்லும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன.

கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படுவதன் மூலம் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களின் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.