சின்னவீரம்பட்டி மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்!
9 Oct 2026, 2:29 am

சின்னவீரம்பட்டி மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்!

உடுமலை, அக்.8-சின்னவீரம்பட்டி கிராமத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு உரிய பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்உடுமலை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சின்னவீரம்பட்டி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 72 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த1992-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. இதில் வீடுகள் கட்டி 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வந்தபோதிலும், வருவாய்த்துறை ஆவணங்களில் பயனாளிகளின் பெயர்கள் இதுவரை முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. இதனால் பட்டா மாற்றம் செய்ய முடியாமலும், வங்கிக்கடன் உள்ளிட்ட தேவைகளுக்கு சொத்து ஆவணங்களை பயன்படுத்த முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, 72 குடும்பங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்கி வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவுசெய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் தண்டபாணி தலைமையில் பொதுமக்கள் வட்டாட்சியர் அருணாவை வியாழனன்று சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரக்குழு உறுப்பினர்கள் வசந்தி, சக்திவேல், கிளைச் செயலாளர் சிவராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.