சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமைப் போராளி! ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார்
16 Jul 2026, 11:51 pm
<p><strong>சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமைப் போராளி! ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 15– "மரம் என்பது வெறும் தாவரம் அல்ல, அது மனித குலத்திற்கான இலவச ஆக்சிஜன் தொழிற்சாலை" என்பதை உணர்ந்து, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வரும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஏ.எஸ். சபாநாயகம். இவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் முதன்மை செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். பணிகளுக்கு இடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதீத ஆர்வம் கொண்ட இவர், சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் தனது நிறுவன ஊழியர்களுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறார். அதே உணர்வுடன், தனது சொந்த ஊரான சிதம்பரத்திலும் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஜூலை 15-ம் தேதி சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் வளாகம் மற்றும் குளக்கரைச் சுற்றுப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்றது. இதில் ஏ.எஸ். சபாநாயகம் நேரில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். இதேபோல், சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட அவர், கடந்த ஆண்டு சிதம்பரம் ஆனந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் மற்றும் கோவில் உட்பிரகாரத்தைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, அவற்றை இன்றும் தொடர் கண்காணிப்பில் பராமரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "இன்றைய நவீன உலகில் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மிக எளிய, அதேசமயம் அசுர பலம் கொண்ட ஒரே தீர்வு மரம் வளர்ப்பது மட்டுமே. இன்று நாம் நடும் ஒவ்வொரு கன்றும், நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் வழங்கும் வாழ்வாதாரப் பரிசு" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நற்பணியைத் தொடர்ந்து, தில்லை காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சமூக அக்கறையுடன் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஏ.எஸ். சபாநாயகத்தின் இந்த உயரிய முயற்சிக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மனதாரப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் ஏ.எஸ். வேல்முருகன், எஸ். ஞானசேகரன், தொழிலதிபர் முருகேசன் மற்றும் சவுதி அரேபியா நிறுவன மேலாளர்கள் சிவக்குமார், கார்த்திகேயன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
