சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் விலக்கல்
1 hour before
<p><strong>சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் விலக்கல்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 12- சிதம்பரம் அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாகவே தங்க ளுக்குப் போதிய குடிநீர் கிடைக்கவில்லை எனப் புகார் தெரிவிக்கும் கிராம மக்கள், தங்களது அடிப்படைத் தேவையை நிறைவேற்றக் கோரி நெடுஞ்சாலையில் திரண்டனர். குறிப்பாக, ஆயிப்பேட்டை ரோட்டு தெருவில் வசிக்கும் மக்களுக்குத் தனி குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், பெரிய தெருவில் பழுதடைந்து பாழாகக் கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித் தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கைகளைத் தீவிரமாகக் கவனித்த அதிகாரிகள், அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் விதொச மாநிலக் குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட துணைத் தலைவர் ஆர். நெடுஞ்சேரலாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் கே. முருகன், சிபிஎம் கிளைச் செயலாளர் கனகராஜ் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் ராகுல், விமல், மணிகண்டன் உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.</p>
