சென்னையில் கோடைகால வெப்பநிலை 2040-க்குள் 1 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் கால நிலை கண்காணிப்பு அறிக்கை எச்சரிக்கை
7 Jun 2026, 1:08 am

சென்னையில் கோடைகால வெப்பநிலை 2040-க்குள் 1 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் கால நிலை கண்காணிப்பு அறிக்கை எச்சரிக்கை

சென்னை, ஜூன் 6- அடுத்த 14 ஆண்டுகளில் சென்னை நகரம் அதிக வெப்பமாகவும், அதிக மழையைப் பெறக்கூடியதாகவும் மாற வாய்ப்புள்ளது.

கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் வரையிலும், தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் 12% வரையிலும் அதிகரிக்கக்கூடும் என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய காலநிலை முன்கணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

‘இந்தியக் கடற்கரைப் பகுதி: காலநிலை முன்கணிப்புகள் 2021-2040’ (Indian Coastal Region: Climate Projections 2021-2040) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காலநிலை மாற்றம் என்பது இனி ஒரு தூரத்து அச்சுறுத்தல் அல்ல என்றும், இந்தியாவின் கடற்கரைப் பகுதிகள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மாற்றக் காலத்திற்குள் நுழைந்துவிட்டன என்றும் எச்சரிக்கிறது.

1960-களின் அடிப்படைத் தரவுகளுடன் ஒப்பிட்டு, 2021 முதல் 2040 வரையிலான காலப்பகுதியில் மாவட்ட வாரியாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை 25x25 கி.மீ அளவிலான துல்லியமான காலநிலைத் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு வரைபடமாக்கியுள்ளது.

தமிழக மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள் சென்னை: கோடைகால வெப்பநிலை 1°C உயரும், தென்மேற்குப் பருவமழை 12% அதிகரிக்கும். நாகப்பட்டினம்: வடகிழக்குப் பருவமழையின் போது வழக்கத்தை விட 20% கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி: மாறிவரும் காற்றின் போக்கு மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு காரணமாக, இப்பகுதிகளில் உள்ள கடற்கரை மக்களின் வாழ்வாதாரம் ஏற்கெனவே பாதிப்புகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியக் கடற்கரைப் பகுதிகளின் பொதுவான நிலை ஒட்டுமொத்த இந்தியக் கடற்கரைப் பகுதிகளிலும், சராசரி வெப்பநிலை 2040-க்குள் சுமார் 1.5°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிட்டத்தட்ட 40 கடற்கரை மாவட்டங்களில் கோடைகால வெப்பநிலை உயர்வு 1°C-ஐத் தாண்டும் எனத் தெரிகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடற்கரை மாவட்டங்களில் மனித ஆரோக்கியத்திற்குப் ஆபத்தானதாகக் கருதப்படும் 31°C வரையிலான ‘வெட்-பல்ப்’ (காற்றில் ஈரப்பதமும் வெப்பமும் கலந்து மூச்சுவிட சிரமமாக இருக்கும் நிலை) வெப்பநிலை பதிவாகலாம் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. கடல் மட்ட உயர்வு மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பு நடுத்தர அளவிலான கார்பன் உமிழ்வு தொடர்ந்தால் கூட, 2050-க்குள் உலகளாவிய கடல் மட்டம் சுமார் 15 செ.மீ உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது கடலோரக் குடியிருப்புகளுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

மேலும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதால், கடுமையான வெப்பமண்டலச் சூறாவளி புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடல் வெப்பமடைவதால், மீன்களின் இருப்பிடம் மற்றும் எண்ணிக்கை மாறிவருகிறது.

இதனால் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் சமூகங்கள் மற்றும் நிலையான கடல் சூழலை நம்பியிருக்கும் கடலோரத் தொழில்கள் ஏற்கனவே பாதிக்கப்படத் தொடங்கிவிட்டன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இது குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை பள்ளியைச் சேர்ந்த சந்தோனு கோஸ்வாமி கூறுகையில், “அடுத்த 15 ஆண்டுகளில் ஏற்படவிருக்கும் இந்த மோசமான காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள, நமது உள்கட்டமைப்புகளையும், நிர்வாக முறைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த முடிவுகள் உணர்த்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.