சென்னை விரைவு செய்திகள்
7 Jun 2026, 1:49 am

மாநகராட்சி பள்ளி ஊழியர்களை மிரட்டி கையெழுத்து வாங்கும் நிர்வாகம்!

சென்னை, ஜூன் 6- மாநகராட்சி பள்ளி ஊழியர்களிடம் மே மாத ஊதியம் கேட்க மாட்டோம் என்று மிரட்டி கையெழுத்து வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.லோகநாதன் கூறுகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணி புரியும் என்யூஎல்எம் தூய்மை பணியாளர்களுக்கு மே மாதம் சம்பளம் கேட்டு தொடர்ந்து ஆணையரை சந்தித்து சிஐடியு முறையிட்டு வருகிறது. இதுகுறித்து புதிய ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள தோடு, பள்ளி திறந்த கையோடு அனைவரையும் மே மாத சம்பளம் கேட்க மாட்டோம் என்று கட்டாயப்படுத்தி எழுதி வாங்கும் பணிகளை தலைமை ஆசிரியர் மூலம் செய்து வருகின்றனர். புதிய ஆட்சியில் வளர்ச்சியில் மாற்றம் எதிர்பார்த்தோம். ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. எனவே தூய்மை பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வரும் 9ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

வேலூர் நேதாஜி மைதானத்தில் கலவரத் தடுப்பு பயிற்சி

வேலூர், ஜூன் 6 - வேலூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக கலவர தடுப்பு பயிற்சி வேலூர் நேதாஜி மைதானத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில் திருச்சியில், ‘கலவரம் உட்பட அசாதாரண சூழ்நிலைகளில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினருடன் இணைந்து ஆயுதப்படை காவலர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இத்தகைய பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார். இப்பயிற்சியில் கலவரம், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நேரங்களில் அவற்றை கட்டுப்படுத்த வஜ்ரா போன்ற வாகனங்களை பயன்படுத்துவது, தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை கையாளுவது, கலவரத்தால் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது உட்பட பல்வேறு செயல்விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை உடனிருந்தார்.

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவாகனங்கள் ஏலம்!

ராணிப்பேட்டை, ஜூன் 6 – ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள், வருகிற செவ்வாயன்று (ஜூன் 9) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் தங்களுடைய அடையாள அட்டை நகலுடன் (ஆதார் அட்டை போன்ற சான்றுகள்) வரவேண்டும். ஏல மைதானத்திற்குள் நுழைய ரூ.100 நுழைவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதன் பின்னரே ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகக் கருதப்படும் என்பதால், விருப்பமுள்ள பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர், ஜூன் 6- பூந்தமல்லி அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு, காரில் வந்த நாற்பது வயது பெண்ணை வழிமறித்துக் கடத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து நகைகளைப் பறித்த வழக்கில் ஆறு பேருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. இவ்வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, குற்றவாளிகளான சூர்யா, தினேஷ், கணேஷ், சந்தோஷ்குமார், சுபாஷ் ஆகிய ஐந்து பேருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், தலா அறுபத்தேழாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். கருப்பையா என்ற மற்றொரு குற்றவாளிக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நாற்பத்தேழாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த அப்பெண்ணிற்குத் தமிழக அரசு சார்பில் பன்னிரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடும், அரசுப் பள்ளி வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பிற்குப் பின் ஆறு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பத்தூர் அருகே இரு குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து சாம்பல்

திருப்பத்தூர், ஜூன் 6- திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை அருகே, அருகருகே அமைக்கப்பட்டிருந்த இரண்டு குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாகச் சாம்பலாகின. ராஜமங்கலம் போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான சுஜாதா, அருணா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை காலை அவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டுக் கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீடுகளில் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், இரு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதில் சுஜாதா வீடு கட்டுவதற்காகப் பீரோவில் வைத்திருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இத்தீ விபத்து குறித்து கிராமிய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரசிங்கபுரத்தில் குப்பைகளை 4 வகையாகப் பிரிக்க உத்தரவு

ராணிப்பேட்டை, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப் பணிகள் மற்றும் பள்ளி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய ஆட்சியர், இனிவரும் காலங்களில் வீடுகளில் இருந்து குப்பைகளை ஈரக்கழிவு, உலர்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு பராமரிப்புக் கழிவு என நான்கு வகைகளாகத் தரம் பிரித்து வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார். பின்னர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர், பள்ளி திறப்பதற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்காதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும், பள்ளி வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் மணல், ஜல்லிக் கற்கள் மற்றும் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்தார்.