சென்னை விரைவு செய்திகள்
21 Jul 2026, 11:36 pm

வீட்டின் பூட்டை உடைத்து நகை

கொள்ளை சென்னை, ஜூலை 21- சென்னை மேற்கு மாம்பலம் ஜூப்ளி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மோ.மணி (34). இவர் மனைவி செளமியா (29). மென்பொறியாளரான இவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவதும் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டி வீட்டு சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்துக்கு சென்றனர். அங்கிருந்து இருவரும் செவ்வாயன்று வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் நகை, பணம் கொள்ளை அடிக்கப்படிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அசோக்நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலந்து நோயாளிக்கு இதயக்கீழறை மிகைத்துடிப்புக்கு சென்னையில் சிகிச்சை

சென்னை, ஜூலை 21- மேம்பட்ட சர்வதேச மருத்துவ மையமாகச் சென்னை திகழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை காவேரி மருத்துவமனை போலந்து நாட்டைச் சேர்ந்த நோயாளிக்குச் சிக்கலான ‘இதயக்கீழறை மிகைத்துடிப்பு’ பாதிப்புக்கு ‘வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா அப்லேஷன்’ சிகிச்சையை வெற்றிகரமாக அளித்துள்ளது. இணையவழியில் தகவல்களை அறிந்து, மருத்துவ மனையின் பன்னாட்டு நோயாளிகள் பிரிவின் விசா மற்றும் பயண உதவிகளுடன் இந்நோயாளி சென்னை வந்தார். மருத்துவ நிபுணர் தீப் சந்த் ராஜா தலைமையிலான குழுவினர், அதிநவீன 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘கதீட்டர் அப்லேஷன்’ மூலம் சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கண்டுள்ள னர். இந்த அணுகுமுறை சிகிச்சையின் வெற்றி விகிதத்தை அதிகரிப்பதோடு, பிரச்சனை மீண்டும் வருவதைத் தடுத்து, நோயாளிகள் முழு தன்னம்பிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த இந்நோயாளி எங்களது சிகிச்சை செயல்முறைக்கு பிறகு நலமுடன் முன்னேற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி வேனில் சிக்கி 1ஆம் வகுப்பு மாணவன் பலி

சிதம்பரம், ஜூலை 21- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி வேனில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த அணிக்குழி கிரா மத்தைச் சேர்ந்த அன்புமணி என்பவரின் மகன் ஆத்விக் (5). இவர் அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியில் உள்ள ஸ்ரீ ராமலிங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை பள்ளி முடிந்து பள்ளி வேனில் வீட்டிற்கு வந்த சிறுவன் ஆத்விக், வேனில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளி வேனின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறை யினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இடத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க எதிர்ப்பு கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் எச்சரிக்கை

சிதம்பரம், ஜூலை 21- சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் குப்பைகளைச் சேகரித்து உரம் தயாரிக்கும் தோப்பு புறம்போக்கு நிலத்தை வனத்துறைக்கு நிலமாற்றம் செய்யக் கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்குக் கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிள்ளை பேரூராட்சியில் குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்து உரம் தயாரிக்கும் மையம் தோப்பு புறம்போக்கு இடத்தில் (சர்வே எண் 248/2, பரப்பளவு 3.50 ஏக்கர்) செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் பனங்குஞ்சி என்ற இடத்தில் இருளர் பழங்குடியின மக்கள் நீண்டகாலமாகக் குடிசை அமைத்து வசித்து வந்தனர். அவர்களுக்குக் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித்தர முந்தைய ஆட்சியில் மண் பரிசோதனை முடிந்த நிலையில், தற்போதைய அரசால் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேங்ரூவ் (சதுப்புநில) செடிகள் மையம் அமைப்பதற்காக இந்த நிலத்தை வனத்துறைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதை ஏற்க முடியாது என கடந்த ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற கிள்ளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், ‘திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைத் தவிர வேறு எந்தத் துறைக்கும் இந்நிலத்தை வழங்கக் கூடாது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரூராட்சி மன்றத்தின் ஒப்புதல் இன்றி மாவட்ட நிர்வாகம் இந்நிலத்தை வனத்துறைக்கு வழங்கினால், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு கிள்ளை கடைவீதியில் குப்பைகளைக் கொட்டிப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மோதி தனியார் ஊழியர் பலி

அம்பத்தூர், ஜூலை 21- தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் ஆர்சி தெரு வைச் சேர்ந்தவர் விஜய குமார் (40). இவர், சென்னை மதுரவாயல் பகுதியில் தங்கியிருந்து பொருட்க ளை டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், திங்கட்கிழமை இரவு வானகரத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கி மதுரவாயல் புற வழிச்சாலையில் மொ பெட்டில் சென்று கொண்டி ருந்தார். மதுரவாயல் மேமம்பாலத்தில் செல்லும் போது, பின்னால் வந்த ஒரு லாரி அவரது மொபெட்டின் மீது மோதியது. இதில் பலத்தக் காய மடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பெரம்பூர் சுப்பிரமணியம் நகர் வஉசி தெருவைச் சேர்ந்த வேணுகோபால் (58) என்பவரை கைது செய்தனர்.