சென்னை விரைவு செய்திகள்
28 May 2026, 11:26 pm

சேர்க்காடு அரசு மருத்துவமனை வசதிகள் மேம்படுத்தப்படும் எம்.எல்.ஏ சுதாகர் உறுதி!

வேலூர், மே 28- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு காட்பாடியில் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய பின், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எம்.சுதாகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சேர்க்காடு அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகளுக்கு 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாகவும், அறுவை சிகிச்சை மற்றும் சிறப்பு மருத்துவர் வசதிகள் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சுகாதார அமைச்சரிடம் பேசி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், ரயில்வே அதிகாரிகளுடன் பேசி காட்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், மாற்று வழி மேம்பாலப் பணிகள் முடிந்தவுடன் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்றும், மூடப்பட்டுள்ள பூங்காக்கள் விரைவில் திறக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அம்பத்தூர், எண்ணூரில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, மே 28- சென்னை அம்பத்தூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில், ஆந்திரா மற்றும் ஹைதராபாத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 7 கிலோ கஞ்சா மற்றும் 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அம்பத்தூர் பெருமாள் கோயில் அருகே 5 கிலோ கஞ்சா மற்றும் 900 போதை மாத்திரைகளுடன் சுற்றித்திரிந்த ஜஃபர்பாக் (22), சுதன் (22) ஆகிய இருவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல், எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட நாகராஜ் (34), பூபதி (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்குக

செங்கல்பட்டு, மே 28- சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்குக் கடந்த அரசால் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை, நான்கு மாத நிலுவைத்தொகையுடன் சேர்த்துத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. இராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியிட்ட அரசாணை 41-ன் படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.3,400 மற்றும் ரூ.3,000 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசாணை வெளியாகி 4 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசிடம் இதுகுறித்து முதல்வர், சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் அரசுச் செயலாளருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு, பிப்ரவரி மாதம் முதற்கொண்டான 4 மாத நிலுவைத்தொகையுடன் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்!

சென்னை,மே 28- சென்னையிலிருந்து 252 பயணிகள், 12 ஊழியர்கள் என மொத்தம் 264 பேருடன் லண்டன் புறப்படத் தயாரான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஓடுபாதையில் சென்றபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, அனைத்துப் பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சென்னையில் ரூ.16 லட்சம் மோசடி: 3 பேர் கைது

சென்னை, மே 28- தி.நகரில் உள்ள தனி யார் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகையை மீட்பதற்காக, நகை அடகு நிறுவன முகவர் விஜயகுமார் என்பவர் ராதாகிருஷ்ணன் என்பவரது வங்கி கணக்கில் ரூ.40.06 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். பணம் ஏறியவுடன், ராதாகிருஷ்ணன் தனது கைபேசியை அணைத்து விட்டு, அதிலிருந்து ரூ.16 லட்சத்தை உடனடியாக வேறொரு கணக்கிற்கு மாற்றியுள்ளார். மோசடியை உணர்ந்த விஜயகுமார் உடனடியாக வங்கியிடம் முறையிட்டு, கணக்கில் இருந்த மீதித் தொகையான ரூ.24.06 லட்சத்தை முடக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணன், தீபக், அசன்அலி ஆகிய 3 பேரைக் கைது செய்து, மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

பேருந்து பயணியிடம் அமைச்சர் அலட்சியமான பதில்!

சென்னை, மே 28 - சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், பேருந்து தாமதம் குறித்து புகார் கூறிய பயணியிடம் “நீ நல்லா சாப்பிட்டிருக்க; நான் இன்னும் சாப்பிடல” என ஒருமையில் பதிலளித்தது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறையால் கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து 1,981 சிறப்பு பேருந்துகள் தென் மாவட்ட ங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை என்றும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் குறித்த நேரத்திற்கு வரவில்லை என்றும் பயணிகள் அமைச்சரிடம் கடும் முறையீடு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் அளித்த அலட்சிய பதில் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பொறியியல்: மீண்டும் பெருகிவரும் ஆதரவு

சென்னை, மே 28- சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி, ராஜலட்சுமி, ஆர்.எம்.கே உள்ளிட்ட முன்னணி கல்லூரிகளில் இப்பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியுள்ளனர். வாகன உற்பத்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி, கல்லூரிகள் வழங்கிய நவீனத்திறன் பயிற்சிகள் மற்றும் ஆந்திராவில் பெருகி வரும் புதிய முதலீடுகள் காரணமாக இந்த ஆண்டு கணினி அறிவியல் துறையை விட மெக்கானிக்கல், இஇஇ பிரிவுகளில் அதிக சத வீத மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அசோக் லேலண்ட், போஷ், சிமென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் மூலம் இம்மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆரம்பக்கட்டச் சம்பளம் கிடைத்துள்ளது. அதே நேரம், வரும் 2026-27 நிதியாண்டில் ஐடி நிறுவனங்களின் வேலை வாய்ப்புத் தேவை சற்று குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் ஏடிஜிபி அருண் நேரில் விளக்கம்!

சென்னை, மே 28- தொழிலதிபர் ஒருவரைக் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிரான ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, சென்னை முன்னாள் காவல் ஆணை யரும், தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான ஏடிஜிபி அருண் நேரில் ஆஜரானார். முன்னதாக, நீதிமன்ற ஊழி யரை லஞ்ச ஒழிப்பு அலுவலக ஊழியர் ஒருவர் சம்மன் வாங்கக் கோரி காத்திருக்க வைத்ததால் அதிருப்தியடைந்த நீதிபதி சுவாமிநாதன், அந்த ஊழியரை நேரில் வர வழைத்துக் கண்டித்தார். பின்னர் மாலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட பில்டர் 200-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சி னையைத் தவிர்க்கவே சட்டப்படி குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏடிஜிபி அருண் விளக்கமளித்தார். மேலும், தனக்கு எதிரான இணையதள அவதூறு கள் குறித்து அருண் குறிப்பிட்ட போது, “நீதிபதிகளும் விமர்ச னங்களைச் சந்திக்கிறார்கள்; இதையெல்லாம் கடந்து போக பழக வேண்டும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.