சென்னை விரைவு செய்திகள்
13 May 2026, 11:41 pm

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்: 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

சென்னை, மே 13- கடல் வழியாக இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேருக்குப் புதுக்கோட்டை நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மண்டபம் அருகே ‘கண்மணி’ என்ற மீன்பிடி படகை வழிமறித்த கடலோர காவல்படையினர், அதிலிருந்து ரூ. 1.52 கோடி மதிப்பிலான 290 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ ஹாஷிஷ் ஆயிலைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் படகில் இருந்த 4 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய படகு உரிமையாளர் ராமு, ஒருங்கிணைப்பாளர் முகமது பாசித் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புதனன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அனைவருக்கும் சிறை தண்டனையுடன் தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. 2026-ம் ஆண்டில் இதுவரை 17 பேருக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தண்டனை பெற்றுத் தந்துள்ள நிலையில், கடத்தல் குறித்த தகவல்களை 1933 என்ற உதவி எண்ணிற்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

திருவள்ளூர், மே 13- திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயி கள் நலன் காக்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 15) காலை 10 மணிய ளவில் திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் சார் ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விவசாயி கள் கலந்து கொண்டு தங்களது வேளாண் சார்ந்த குறைகளுக்குத் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரி வித்துள்ளார். இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மின்வாரியம் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதி காரிகளும் கலந்து கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது. வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்களை மட்டுமே மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செல்லப்பிராணிகள் உரிமம் புதுப்பிக்க ஜூன் 15 வரை காலக்கெடு

சென்னை, மே 13- சென்னையில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி களில் சுமார் 9,650-க்கும் மேற்பட்டவற்றின் உரிமங்கள் தடுப்பூசி செலுத்தாததால் காலா வதியாகியுள்ளன. எனவே, ஜூன் 15-ம் தேதிக்குள் வெறிநாய் கடி எதிர்ப்புத் தடுப்பூசி செலுத்தி, உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறும் உரிமை யாளர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் எச்சரித்துள்ளார். மேலும், பொது இடங்களில் சங்கிலி இன்றி நாய்களை அழைத்து வருபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சியின் 11 மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்படுவதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிமம் மற்றும் தடுப்பூசி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நந்தம்பாக்கத்தில் 113 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, மே 13- சென்னை நந்தம்பாக்கத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற மூன்று பேரை போலீசார் செவ்வாயன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 112.7 கிலோ குட்கா பாக்கெட்டுகள், ஒரு கார், இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நந்தம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்றிலிருந்து சில மூட்டைகளை இருசக்கர வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்களைக் கண்டு சந்தேகமடைந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதானவர்கள் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் ஜெகதீஷ் (40), ராஜா (42) மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (43) என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து காரில் சட்டவிரோதமாகக் குட்கா பொருட்களைக் கடத்தி வந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. கைது செய்யப்பட்டவர்களில் ஜார்ஜ் ஜெகதீஷ் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொடுங்கையூரில் வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

சென்னை, மே 13- கொடுங்கையூர் பகுதியில் சட்டவிரோதமாக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த நான்கு இளைஞர்களைக் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 696 மாத்திரைகள் மற்றும் நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் குப்பை கிடங்கு அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கடந்த திங்கட்கிழமை காலை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தடையை மீறி வலிநிவாரணி மாத்திரைகளை இருப்பு வைத்து விற்ற கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட 3பேரை கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான இளைஞர்கள் மும்பைக்குச் சென்று அங்கிருந்து மொத்தமாக இம்மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

திருட்டு செல்போன் கொடுத்த விவகாரம் இளைஞர் கைது

சென்னை, மே 13- பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய அரிபாபு (20) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்கு முன்பு, அரிபாபு தனது குழந்தையின் மருத்துவச் செலவிற்காக ஆட்டோ ஓட்டுநர் தீபனின் தாயாரிடம் ஒரு செல்போனை அடமானமாகத் தந்து 500 ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அந்த செல்போனை ஆன் செய்தபோது, அது திருடப்பட்டது எனத் தெரியவந்ததையடுத்து ரயில்வே போலீசார் அதனை ஒப்படைக்கக் கோரினர். இதுகுறித்து தீபன் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த அரிபாபு அவரைக் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துத் தப்பியோடினார். காயமடைந்த தீபன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் அரிபாபுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தைகளுக்கான புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

சென்னை,மே 13- போகோ மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் புதிய அனிமேஷன் தொடர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. பிரபல லாட்பாட் காமிக்ஸ் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு, சாம்பாட் சாம்பாட் என்ற நகைச்சுவைத் தொடர் போகோவில்-இல் வெளியாகிறது. சிறிய நகரத்துத் திருடர்களான இவர்களின் குறும்புகள் குழந்தைகளுக்குச் சிரிப்ப விருந்தாக அமையும். அதேபோல், ‘கியான் கிக்கி என்ற புதிய தொடர் கார்ட்டூன் நெட்வொர்க் அலைவரிசையில் வெளியாகிறது. அண்ணன்-சகோதரி ஆகியோரின் பாசத்தையும், சாகசங்களையும் இது சித்திரிக்கிறது. இந்தியத் திறமையாளர்களால் உருவாக்கப்பட்ட இத்தொடர்கள், உலகளாவிய தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிஸ்கவரி பிளஸ் ஓடிடி தளத்திலும் கண்டு மகிழலாம். நகைச்சுவை மற்றும் கற்பனை நிறைந்த இந்தத் தொடர்கள் இந்தியக் குழந்தைகளின் ரசனைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன என்று அந்த தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.

எண்ணூரில் மதுபானக் கடையை மூட சிபிஎம் கோரிக்கை

சென்னை, மே 13- திருவொற்றியூர் எண்ணூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுபானக் கடையை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், முதலமைச்சர் உத்தரவின்படி, கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தை மற்றும் வழிபாட்டு நிறுவனங்கள் அருகில் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல் திருவொற்றியூா் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட எண்ணூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் (எண்.8824) மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த பகுதிக்கு பேருந்தில் வரும் பெண்களும், பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இந்தக் கடையை மூட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 28.7.2025 அன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இந்தக் கடையை அகற்ற தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தல்

கடலூர், மே 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழுக் கூட்டம் நெல்லிக் குப்பத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெரு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம். மேலும், 'போதை யற்ற தமிழகம்' உருவாக்குதல் என்ற அடிப்படையில், முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படும் கடலூர், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வடலூர் ரயில்வே கேட் அருகே மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும். அதேபோல், குள்ளஞ் சாவடி மற்றும் சிதம்பரத்தில் பள்ளிக்கூடங்க ளுக்கு அருகே உள்ள கடைகளை மூடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குத் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். அதோடு, கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் அபின் போன்ற போதைப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதை முழுமை யாகத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள மாவட்டக் குழு தீர்மான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

சிதம்பரம், மே 13 விழுப்புரம் – தஞ்சாவூர் ரயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்துச் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ரியாஸ், தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் - தஞ்சாவூர் ரயில் பாதை சுமார் 193 கி.மீ. நீளம் கொண்டது. இந்த வழித்தடத்தில் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இப்பாதை சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமானது. தற்போது இப்பகுதியில் ஒரே ஒரு ரயில் பாதை மட்டுமே இருப்பதால், ரயில்கள் கடந்து செல்ல (Crossing) பல இடங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினசரி இயக்கப்படும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இப்பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.

வாலிபர் சங்கம் கோரிக்கை

விழுப்புரம், மே 13- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி சாலை பகுதியில் வழிபாட்டுத் தலம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டிவனம் பகுதிக் குழுவினர் கூறுகையில், “வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே வேளையில், திண்டிவனம் நகரத்தில் செஞ்சி சாலை பகுதியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக உள்ள இரண்டு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாலிபர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள 717 மதுக்கடை களின் பட்டியலில் இந்த இரண்டு கடைகளும் இடம் பெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை இந்தப் பட்டியலில் இல்லையெனில், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் இவ்விரு கடை களையும் மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர். இக்கோரிக்கையை அப்பகுதி வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு அவர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

காசிமேட்டில் காவல் நிலையத்தில் இருந்து தப்பிய கைதி கைது

சென்னை, மே 13- சென்னை காசிமேட்டில் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதியை மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர். ராயபுரம் சோமு செட்டி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (32). இவரை ஒரு குற்ற வழக்குக்காக காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர் கடந்த திங்கட்கிழமை கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அன்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து சக்திவேல் கைவிலங்குடன் திடீரென தப்பியோடினார். இதை சிறிது நேரத்துக்கு பின்னரே அங்கிருந்த காவலர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து காவல் துறையினர் தப்பியோடிய சக்திவேலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து புதுச்சேரி தப்பிச் செல்ல முயல்வது சக்திவேல் அங்கு நிற்பது காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர் சக்திவேலை கைது செய்தனர்.

வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தந்தை பெரியார் திகவினர் கைது

புதுச்சேரி, மே 13- புதுச்சேரி அரசு விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதைக் கண்டித்துக் கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 20 பேரை காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர். புதுச்சேரி புதிய அரசின் பதவியேற்பு விழாவில், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, விழாவில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கப் போராட்டம் அறிவித்திருந்த அக்கழத்தைச் சேர்ந்த 20 பேரை, காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரவர் வீடுகளுக்கே சென்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் செவ்வாயன்று நடை பெற்ற பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாகத் தேசிய கீதமும், மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னசேலத்தில் ரூ.31 கோடியில் 4.7 கி.மீ. தூர சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்

சின்னசேலம், மே 13- சின்னசேலம் நகர் பகுதியில் நீண்ட காலப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, மின்வாரிய அலுவலகம் முதல் அம்மையகரம் வரையிலான 4.7 கி.மீ. தூர இருவழிச்சாலையை, மையத் தடுப்புடன் கூடிய நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை சின்னசேலம் வழியாகச் செல்வதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மற்றும் கேரளா செல்லும் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் தினமும் இப்பகுதியைக் கடந்து செல்கின்றன. குறு கலான சாலை, ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை சேதமடைந்திருந்த காரணங்களால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. முன்பு இச்சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இருந்த தால் மாநில அரசால் அகலப்படுத்த முடியாத சூழல் இருந்தது. கடந்த ஆண்டு இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கின. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அம்சாகுளம் பகுதியில் ஏரியோரம் தடுப்புச்சுவர் அமைத்து சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 12 சிறுபாலங்கள் அகலப்படுத்தப்படுவதுடன், ஏரிகோடி வாய்க்கால் குறுக்கே புதிய மேம்பாலமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கூகையூர், மூங்கில்பாடி, நைனார்பாளையம் உள்ளிட்ட 6 முக்கிய சந்திப்புகளை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதால் சின்னசேலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.