சென்னை விரைவு செய்திகள்
15 Jun 2026, 12:53 am

தி.நகர் மேம்பாலத்தில் கார் டயர் வெடித்து விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை, ஜூன் 14- சென்னை தி.நகர் மேம்பாலத்தில் கார் டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா கிருஷ்ணா என்பவர், இன்று தனது காரில் எழும்பூர் மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கார் தி.நகர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் காரின் கட்டுப்பாட்டை இழந்த திவ்யா கிருஷ்ணா, நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் (மத்திய தடுப்புச்சுவர்) பலமாக மோதினார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேம்பாலத்தின் நடுவே கார் விபத்துக்குள்ளானதால், தி.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நீதிமன்றங்களுக்கு 30 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை, ஜூன் 14- சென்னை மற்றும் அதன் பல்வேறு சிறப்பு நீதிமன்றங்க ளில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அரசு பிளீடர், கூடுதல் அரசு பிளீடர், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்ட நீதிமன்றங்கள், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், மனித உரிமைகள் நீதிமன்றங்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றங்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 30 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணிகளுக்கான தகுதிகள் குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் அமர்வு நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்ற விரும்புவோர், குறைந்தது 7 ஆண்டுகள் நீதிமன்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிறப்பு அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர், குறைந்தது 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள வழக்கறிஞர்கள், இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக ஜூன் 29-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து, தகுதியுள்ள சட்ட வல்லுநர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓசூர் மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆலோசனை: சி.எஸ்.ஆர். நிதி மூலம் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி, ஜூன் 13- ஓசூர் மாநகராட்சிப் பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் அடிப்படை வசதி களை மேம்படுத்துவது குறித்த கல்விக்குழு ஆலோ சனைக் கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகிக்க, ஆணையாளர் முகமது ஷபீர் ஆலம், கல்விக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் வட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு மற்றும் கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, தனியார் தொழிற்சாலைகளின் சி.எஸ்.ஆர். (CSR) நிதியைப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நிதி திரட்டி ஏழை மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. “ஒன்றிணைந்து செயல்பட்டால் பள்ளிகளின் தரத்தை நம்மால் நிச்சயம் உயர்த்த முடியும்” என கல்விக்குழுத் தலைவர் ஸ்ரீதர் நம்பிக்கை தெரிவித்தார்.