சென்னை விரைவு செய்திகள்
16 May 2026, 1:59 am

நாகேஸ்வர ராவ் பூங்கா சீரமைப்பால் பசுமை அழிப்பு: பொதுமக்கள் முறையீடு

சென்னை, மே 15- மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதோடு, அங்கிருந்த பசுமைச் சூழலும் அழிக்கப்பட்டு வருவதால், புதிய டிவிகே எம்.எல்.ஏ வெங்கடரமணன் இதில் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் ரூ.12 கோடி மதிப்பீட்டில் பேட்மிண்டன் மைதானம், நீரூற்றுகள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், தரைத்தளத்தில் அதிக கற்கள் பதிக்கப்படுவதால் மழைநீர் நிலத்தடிக்குச் செல்வது பாதிக்கப்படும் என்றும், மரங்கள் அனுமதியின்றி அழிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 1949-ஆம் ஆண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கல்வெட்டு ஒன்று கட்டுமானக் கழிவுகளோடு வீசப்பட்டிருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 70% பணிகள் நிறைவடைந்துள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், புதிய எம்.எல்.ஏ இந்த வடிவமைப்பை மறு பரிசீலனை செய்து பூங்காவின் பசுமையைப் பாதுகாக்க வேண்டும் எனப் பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 15- தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் வரும் மே 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடை பெறும் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு” ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, பிளாட்டி னம் ஆகிய உலோகங்களின் தரம் அறிதல், காரட் கணக்கீடு, விலை நிர்ணயம், போலி நகைகளைக் கண்டறி தல் மற்றும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள் கற்றுத்தரப்படும். மேலும், வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பெறும் வழிமுறைகள், அரசு கடனுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப் பினரும் (ஆண், பெண், திருநங்கைகள், திரு நம்பிகள்) இதில் பங்கேற்க லாம். தங்குவதற்கு குறைந்த வாடகையில் விடுதி வசதி யும் உண்டு. கூடுதல் விவ ரங்களைப் பெறவும், முன்பதிவு செய்யவும் விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளத்திலோ அல்லது 8668100181, 9360221280 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறையாத சென்னை இரவு நேர வெப்பம் புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை, மே 15- சென்னையில் கோடைகாலம் இல்லாத சாதாரண மாதங்களிலும் கூட இரவு நேரங்களில் வீடுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 'கிளைமேட் ட்ரெண்ட்ஸ்' அமைப்பு நடத்திய "இந்தியாவின் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் வீடுகளில் இரவு நேர வெப்ப அழுத்தம்" என்ற புதிய ஆய்வில், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்குள் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து 32°C-க்கு அதிகமாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 2025 முதல் ஏப்ரல் 2026 வரை 50 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சில வீடுகள் தொடர்ந்து 8 மாதங்கள் வரை இத்தகைய கடுமையான வெப்பச் சூழலை எதிர்கொண்டதும், இரவு நேரங்களில் வெப்பநிலை 31°C-க்குக் கீழ் குறைவதே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கூரைகள் மற்றும் சுவர்கள் பகலில் உறிஞ்சும் வெப்பத்தை இரவு 8 முதல் 9 மணிக்குள் வெளியில் உமிழத் தொடங்குவதால், வீட்டிற்குள் வெப்பநிலை 34.7°C வரை உயர்கிறது. அத்துடன் காற்றில் ஈரப்பதம் 75%-க்கும் அதிகமாக இருப்பதால் புழுக்கம் நீடிக்கிறது. ஓரளவு வசதி படைத்தவர்கள் ஏசி போன்ற வசதிகளைப் பயன்படுத்தும் வேளையில், ஏழை மக்கள் வெறும் மின்விசிறிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, நகர்ப்புற வெப்பத் தடுப்புத் திட்டங்களில் பகல் நேர வெப்பத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரவு நேர வீட்டு உட்புற வெப்பத்தைக் குறைக்க 'கூலிங் ரூஃப்' மற்றும் காற்றோட்டமான கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்துவதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சி யாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடியில் நவீன வசதிகள்

சென்னை, மே 15- தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான நவீனமயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிலையத்தின் அனைத்து 10 நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 8 மீட்டர் அகல புதிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய மேம்பாலமும் தொடர்ந்து செயல்படுவதால் அலுவலக நேர நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 9 புதிய மின்தூக்கிகள் மற்றும் 10 தானியங்கி படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன; இதில் 6 மின்தூக்கிகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய வாகன நிறுத்துமிடம், கூடுதல் கூரைகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தெற்கு புறநகர்ப் பயணிகள் பெரும் பயனடைவர் என

ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட்டம் விட்டபோது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

காஞ்சிபுரம், மே 15- காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 13 வயது சிறுவன், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான். செவிலிமேடு மேற்கு மாட வீதியைச் சேர்ந்த கார்த்தி (13) என்ற அந்தச் சிறுவன், மாடியில் பட்டம் விட்டபோது அதன் நூல் அறுந்துபோனதால், அதைப்பிடிக்க ஓடியுள்ளான். மாடியின் பக்கவாட்டுச் சுவர் (Parapet wall) மிகவும் குட்டையாக இருந்ததால், எதிர்பாராதவிதமாகத் தடுமாறி சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட அச்சிறுவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டான். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்துக் காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

சென்னை, மே 15- பனையூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பு தளத்தில், மின்சாரம் பாய்ந்ததில் கார்த்திகேயன் (28) என்ற ஊழியர் உயிரிழந்தார். கானத்தூர் அருகே நடந்த படப்பிடிப்பில் மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திகேயன், எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்டார். படப்பிடிப்புக் குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட கானத்தூர் போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த நிலையில், இவ்விபத்து காரணமாக அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

வெளிநாடு சென்றவர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை!

வடலூர், மே 15- அமெரிக்காவில் உள்ள மகனைப் பார்க்கச் சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 103 பவுன் தங்க நகைகள் மற்றும் 6 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூர் நாகேஷ் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் ஊட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சரவணகுமார் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணியாக உள்ள தனது மருமகளைக் கவனித்துக் கொள்வதற்காக வேலாயுதம் மற்றும் அவரது மனைவி பாசமலர் ஆகியோர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா சென்றுள்ளனர். வீட்டின் சாவியைத் தனது தம்பி மனைவி பூங்காவனத்திடம் கொடுத்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பூங்காவனம் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 103 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மற்றும் வடலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்ட போலீஸார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

கடலூரில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம்

கடலூர், மே 15- கடலூரில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடலூர் அண்ணா பாலம் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெரியார் சிலை முதல் பாரதி சாலை வரை இணைப்பு சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இதற்காக, பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் ஜவான் பவன் புறவழிச்சாலை வழியாக மாற்றி விடப்பட்டன. வழக்கமாக இத்தகைய மாற்றங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறை சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால், இம்முறை எவ்வித அறிவிப்பும் இல்லாததால், பாரதி சாலையில் பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து அவதியுற்றனர். பணிகள் முடியும் வரை இந்தத் தற்காலிக மாற்றம் தொடரும் எனத் தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

871 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியர் கண்காணிப்பு

திருவண்ணாமலை, மே 15- திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணிப்பதை உறுதி செய்ய ஆண்டுதோறும் பள்ளிகள் திறக்கும் முன்பாக இத்தகைய ஆய்வுகள் நடத்தப்படுவது வழக்கமாகும். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட அளவிலான கூட்டாய்வுக் குழுவினர் பங்கேற்றனர். இதன்போது, பள்ளி வேன்கள் மற்றும் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவிப் பெட்டி, அவசர கால வெளியேறும் வழிகள், தீயணைப்புக் கருவிகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் ஆகியவை முறையாகப் பொருத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

பங்கு வெளியீடு ஒத்திவைப்பு

சென்னை,மே 14- சந்தை சூழல் சாதகமாக இல்லாத காரணத்தினால், 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த ரூ.335 கோடி ரூபாய் மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சிஎல் குழுமத்தின் செயல் தலை வர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி யாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த ஐபிஓ வெளி யீடு குறித்து நிறுவனம் மீண்டும் பரிசீலிக்கும் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். 2026 மார்ச் 31-டன் முடிவடைந்த நிதியாண்டில், சிஎல் ஹெச்ஆர் நிறுவனத்தின் வருவாய் 32 சதவீதம் உயர்ந்து 1,985 கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதன் வரு வாய் 1,504 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 6,000 கோடி ரூபாய் வரு வாயை ஈட்ட இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட பாண்டிய ராஜன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலப் பணியாளர் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா நாராயண் மிஸ்ரா, நிறுவனங்கள் இப்போது வெறும் சேவைகளைத் தாண்டி திறமை மற்றும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தீர்வுகளையே எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

ஐக்யூ நியோ 10: இரண்டு புதிய செல்போன் அறிமுகம்

சென்னை,மே 15 ஐக்யூ நிறுவனம் தனது ‘நியோ 10’ ஸ்மார்ட்போனில் ‘ஆல்பைன் ஒயிட்’ மற்றும் ‘அஸ்பால்ட் பிளாக்’ ஆகிய இரண்டு புதிய நிறங்களை அறிமுகம் செய்துள்ளது. ரேசிங் கார்களின் வேகத்தையும் ஸ்டைலையும் பிரதிபலிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் 8ஜிபி மாடல் ரூ.34,999-க்கும், 12ஜிபி மாடல் ரூ.40,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மே 5-ம் தேதி முதல் iQOO.in மற்றும் அமேசான் தளங்களில் இதன் விற்பனை தொடங்கி யுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிரீமியம் தோற்றத்தையும் விரும்புவோருக்காக இந்த மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முறைகேடு விசாரணை நடத்த விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, மே 15- பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகச் சர்க்கரைத்துறை ஆணையருக்குச் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், ஆலையின் பொறுப்பு அலுவலர் மு.பரமேஸ்வரி பொறுப்பேற்ற பிப்ரவரி 25-ஆம் தேதியிலிருந்து ஆலைக்குப் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆலைக்குச் சொந்தமான 10 தேக்கு மரங்களைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றது, அலுவலகப் பயன்பாட்டிற்கு வாங்கிய இரண்டு புதிய குளிர்சாதனப் பெட்டிகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றது எனப் பல்வேறு புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மே 31-ஆம் தேதியுடன் அவரது பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனச் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஜோதிராமன் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த ஊழல்களுக்கு உறுதுணையாக இருந்த துறை சார்ந்த பணியாளர்கள் 10 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, சர்க்கரை ஆலையைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கடலூர், மே 15- கடலூர் வெள்ளி கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த இருவர் காயமடைந்தனர். கடலூரில் வெள்ளிக்கிழமை காலை முதலே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்நிலையில், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வெள்ளி கடற்கரைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஹரிஹரன் (18) என்பவர் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த ரவி (18) மற்றும் விஷால் (18) ஆகியோர் காயமடைந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னை, மரவள்ளி சாகுபடி ஊக்கத்தொகை: புதுச்சேரி விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி, மே 15- புதுச்சேரி அரசால் வழங்கப்படும் தென்னை மற்றும் மரவள்ளி சாகுபடிக்கான ஊக்கத்தொகையைப் பெற தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை இணை இயக்குநர் சண்முகவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2026-27-ஆம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை விண்ணப்பங்கள் மே 18 முதல் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் இதற்கான விண்ணப்பங்களைப் புதுவை தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகத்திலோ அல்லது தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகங்களிலோ பெற்றுக்கொள்ளலாம். மேலும், வேளாண் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (www.agri.py.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன் 30க்குள் அந்தந்தப் பகுதி உழவர் உதவியகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.