சென்னை விரைவு செய்திகள்
21 Jun 2026, 1:23 am

பெண் உறுப்பினர் இல்லை: கனிமொழி கண்டனம்

சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு பெண் உறுப்பினர்கூட நியமிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பணியாற்றி வரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 21- இன்று நடைபெறும் நீட் மறுதேர்வை எந்தவித குளறுபடிகளும் இன்றி நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய தேர்வு முகமை சார்பில் தமிழ்நாட்டிற்கான மாநில கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

விசாரணை அறிக்கை கோரிய அமைச்சர்

சென்னை, ஜூன் 21- சென்னையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் 11 வயது மாணவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதை காரணம் காட்டி ஆசிரியர் ஒருவர் அவரை பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், அப்படி நடந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு என்று கண்டித்தார். சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை கோரியுள்ளதாகவும், அறிக்கை வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னை, ஜூன் 20- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை யன்று சற்றே குறைந்துள்ளது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 6,745-க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ₹53,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வண்டலூர் பூங்காவிற்கு

ஜூன் 21, 22-ல் இலவச அனுமதி சென்னை, ஜூன் 20- தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் இலவசமாகச் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இலவச அனுமதி என்றாலும், பார்வையாளர்கள் பூங்காவின் இணையதளப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாவதைத் தவிர்க்க, இரு நாட்களிலும் தலா 10,000 நுழைவுச்சீட்டுகள் வீதம் முற்பகல் மற்றும் பிற்பகல் என நேர அடிப்படையிலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பூங்கா காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும். இணையதள வசதி இல்லாதவர்கள் பூங்காவின் நுழைவாயில் கவுண்டர்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரு தினங்களுக்கான அனைத்து ஆன்லைன் நுழைவுச்சீட்டுகளும் முழுமையாகப் பதிவாகிவிட்டதால், பூங்கா கவுண்டர்களில் நேரடிப் பதிவுகள் கிடையாது என்றும், நுழைவுச்சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் பூங்கா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னையில் புதுப்பிக்கப்படாத 13,000 வளர்ப்பு நாய் உரிமங்கள்

சென்னை, ஜூன் 20- பெருநகர சென்னை மாநகராட்சி பலமுறை எச்சரித்தும், நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை வழங்கியும் சென்னையில் 13,000-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான உரிமங்கள் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், அடுத்த வாரம் முதல் விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வளர்ப்பு நாய்களைக் கைவிடுவதைத் தடுக்கவும், ரேபிஸ் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவும் மைக்ரோசிப் பொருத்துவதும், ஆண்டு உரிமம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ஒரு லட்சம் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 65,000 உரிமங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் நிலையில், மார்ச் மாதம் வரை ரூ.7 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டும் உரிய வரவேற்பு இல்லாததால், அடுத்த வாரம் முதல் கால்நடை மருத்துவர் அடங்கிய 45 கண்காணிப்புக் குழுக்கள் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மைக்ரோசிப் ஸ்கேனர் மூலம் தீவிர சோதனை நடத்தவுள்ளதாக மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி ஜே.கமல் உசேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருவேறு சாலை விபத்துகள்: இருவர் பலி

சென்னை, ஜூன் 20- சென்னையில் நேரிட்ட இருவேறு சாலை விபத்துகளில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் மற்றும் ஆன்லைன் டெலிவரி ஊழியர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மதுரவாயலைச் சேர்ந்த சன் டிவி ஊழியர் முத்து ஜெகநாதன், வெள்ளிக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது விழுப்புரத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு விபத்தில், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர் வேலாயுதம் (50), வியாழக்கிழமை அன்று குமணஞ்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் அய்யாவை (54) கைது செய்துள்ளனர்.

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ‘ஹபீஸ் திருவிழா’

சென்னை, ஜூன் 20- டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், மறைந்து வரும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மூன்று நாள் ‘ஹபீஸ் திருவிழா’ நடைபெற்று வருகிறது. காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன் அமைப்பின் எம்.எல்.ராஜேஷ் ஏற்பாடு செய்துள்ள இத்திருவிழா ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இக்கண்காட்சியில் பழங்கால தட்டச்சுப் பொறிகள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், மரத்தாலான பழைய தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பல்லாங்குழி கட்டம்கள் போன்ற அரிய விண்டேஜ் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை வியப்புடன் பார்வையிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தங்களின் தினசரி மொபைல் பயன்பாட்டுத் திரை நேரம் 8 மணி நேரமாக உள்ள நிலையில், அதைக் குறைக்கவும் முன்னோர்களின் வாழ்வியலை அறிந்துகொள்ளவும் இதுபோன்ற திருவிழாக்கள் பெரிதும் உதவுவதாகத் தெரிவித்தனர். குழந்தைப் பருவம் டிஜிட்டல் மயமாகி வரும் இக்காலத்தில், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இத்தகைய பயனுள்ள பொழுதுபோக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனப் பார்வையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பரங்கிமலை பகுதிகளில் கைவிடப்பட்ட 190 வாகனங்கள் அகற்றம்

சென்னை, ஜூன் 20- சென்னை பரங்கிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நீண்ட நாட்களாகக் கைவிடப்பட்டுக் கிடந்த 190 வாகனங்களைப் பெருநகர சென்னை போலீஸார் அகற்றி, காவல் நிலைய வளாகத்திற்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அகற்றப்பட்ட இந்த வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சியின் அதி காரப்பூர்வ இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்தை அணுகித் தங்களது வாகனங்களை மீட்டுச் செல்லலாம் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 61% மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்து வசதி: ஐடிடிபி ஆய்வில் தகவல்

சென்னை, ஜூன் 20- சென்னையில் பொதுப் போக்குவரத்து வசதிகள் எந்தளவுக்கு எளிதாகக் கிடைக்கின்றன என்பது குறித்த 'பீப்பிள் நியர் டிரான்சிட்' என்ற ஆய்வறிக்கையை 'போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம்' வெளி யிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, சென்னையில் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்தில் மாநகரப் போக்குவரத்து கழகம் மிக அதிகபட்சமாக 72.40% பங்களிப்பைக் கொண்டுள்ளது. புறநகர் ரயில் சேவை 20.80% பங்களிப்பையும், மெட்ரோ ரயில் சேவை 6.80% பங்களிப்பையும் கொண்டுள்ளன. எம்டிசி நிறுவனம் சென்னை பெருநகரப் பகுதியில் 687 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கினாலும், நகரின் 61% மக்களுக்கு மட்டுமே வழக்கமான நடைதூரத்தில் பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கிறது. அதிலும், 5 நிமிட நடைதூரத்தில் அடிக்கடி பேருந்து வசதி பெறும் வாய்ப்பு 36% பேருக்கு மட்டுமே உள்ளது. அண்ணா சாலை, சைதாப்பேட்டை போன்ற மையப்பகுதிகளுக்குப் போதிய வசதி உள்ள நிலையில், வேகமாக வளர்ந்து வரும் போரூர், முகலிவாக்கம், சிட்லபாக்கம், மடிப்பாக்கம், சேலையூர் போன்ற புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து இணைப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் விரை வில் 'முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பு' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கவுள்ளது.

தனியார் பள்ளி கட்டண விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கத் தவறிய குழு: பெற்றோர் அதிருப்தி

சென்னை, ஜூன் 20- தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்துவ தற்காக அமைக்கப்பட்ட 'கட்டண நிர்ணயக் குழு' தன் இணையதளத்தில் விவரங்களைத் துல்லியமாகப் புதுப்பிக்கத் தவறியதால் பெற்றோர் கடும் குழப்பமடைந்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்பிர மணியன் தலைமையிலான இக்குழு, பள்ளிகளின் விண்ணப்பங்களைப் பரி சீலித்து மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கட்டணத்தை நிர்ணயிக்கும். ஆனால், மயிலாப்பூர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டிற்கு (2026-27) வசூ லிக்கும் கட்டண விவரங்கள் குழுவின் இணையதளத்தில் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் விடுபட்டுள்ளன. இத்தகைய குளறுபடிகளால், பள்ளிகள் அரசு அனுமதித்ததை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க முடிவதில்லை எனத் தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.அருமைநாதன் மற்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்கள் கடந்தும், இந்த ஆண்டு கட்டணத் திருத்தக் கோரிய 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெறும் 20 பள்ளிகளின் விவரங்கள் மட்டுமே இணையதளத்தில் உள்ளன. இதுகுறித்து குழுவின் சிறப்பு அதிகாரி ஐ.ஆஞ்சலோ தரப்பில் விளக்கம் கிடைக்காத நிலையில், விடுபட்ட தகவல்கள் விரைவில் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் என மற்றொரு அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆவடி காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி செந்தில்குமார் நியமனம்

சென்னை, ஜூன் 20- ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகங்களுக்குப் புதிய காவல் ஆணையர்களை நியமித்து உள்துறைச் செயலர் கே.மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காகவும் பொதுமக்களின் சேவையை மேம்படுத்தவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், டிஜிபி அலுவலக தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக இருந்த செந்தில்குமார் ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆவடி காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா தாம்பரம் காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடியில் 53 கிலோ கஞ்சா பறிமுதல், 25 பேர் கைது

ஆவடி, ஜூன் 20- ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட 128 முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட ஒரு வார கால அதிரடி சோதனையில், 53 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் நடத்திய இந்தச் சோதனையில் கஞ்சாவுடன், மாத்திரைகள் மற்றும் ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், கஞ்சா பயன்படுத்திய 16 இளைஞர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நடப்பு 2026 ஆம் ஆண்டில் இதுவரை ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1,136 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டுள்ளனர்.எனப்போதைப்பொருள் ஒழிப்பிற்கான தீவிர நடவடிக்கையாகக் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.