தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

13 May 2026, 2:35 am
சென்னை விரைவு செய்திகள்

மெரினாவில் ‘புளூ பிளாக்’ கடற்கரை திட்டப்பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு

சென்னை, மே 12- மெரினா கடற்கரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட ‘புளூ பிளாக்’ சீரமைப்புப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என மாநகராட்சி அதி காரிகள் தெரிவித்துள்ளனர். அண்ணா நினைவிடத்திற்குப் பின்புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், வணிக ரீதியி லான கட்டுமானங்களுக்குப் பதில் பொது மக்களுக்கான திறந்தவெளி இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கப் பட்ட இப்பணியில், மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க நிழற்குடைகள், நடைபாதை கள், பசுமைத் தோட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்கு வசதி கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு கட்டங்களில் மூங்கில் இருக்கைகள் மற்றும் வாசிப்பு தளங்கள் அமைக்கப்பட்ட நிலையில், குழந்தை கள் விளையாடுவதற்கும் மக்கள் சுதந்திர மாக உலாவுவதற்கும் அதிக திறந்தவெளி தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டத்தில் கூடுதல் கட்டு மானங்களைத் தவிர்த்து மணல் பரப்பு அதிகமுள்ள திறந்தவெளிப் பகுதிகளாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பரா மரிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ள இந்த முன்னெடுப்பினை கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

வெறிநாய் கடி மரணங்கள் அதிகரிப்பு: 4 மாதங்களில் 17 பேர் பலி

சென்னை, மே 12- தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெறிநாய் கடி பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு கள் இந்த ஆண்டு சடுதியாக அதிகரித்து ள்ளன. மாநில சுகாதாரத் துறை வெளி யிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 2.65 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகி யுள்ளன. இந்த ஆண்டு மாதத்திற்குச் சராசரியாக 65,000-க்கும் அதிகமான நாய் கடி வழக்கு கள் பதிவாகின்றன. இது கடந்த 2021-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இரு மடங்கிற்கும் அதிகமாகும். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 15,371 நாய் கடி சம்பவங்களும், திருவாரூரில் அதிகப்படி யாக 4 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 73.6% பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்பதும், தடுப்பூசி போட்டவர்களில் ஒருவர் மட்டுமே முழுமையான கால அளவை முடித்துள்ளார் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் பதி வான இரண்டு மரணங்கள் குறித்து மாநக ராட்சிக்கும் சுகாதாரத் துறைக்கும் இடையே முரண்பட்ட தகவல்கள் நிலவு கின்றன. மாநகராட்சி தரப்பில் அவை வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பூந்தமல்லி, மே 12- பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளியில், 2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்திப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மாற்று ஊடக மைய இயக்குநர் காளீஸ்வரன் குழுவினர் பங்கேற்று கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர் சேர்க்கையின் முக்கியத்துவத்தைச் சுவாரஸ்யமாக விளக்கினர். கல்வியாளர் மணிமாறன், பள்ளி மேலாண்மைக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி, தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

மயிலாப்பூர், மந்தைவெளியில் இன்று 12 மணி நேரம் கழிவுநீர் உந்து நிலையங்கள் மூடல்

சென்னை, மே 12- சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக, மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே பிரதான கழிவுநீர் குழாய் இணைப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக புதனன்று (மே 13) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட தெற்கு மயிலாப்பூர், சீதாம்மாள் காலனி மற்றும் மந்தைவெளிப்பாக்கம் ஆகிய கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாகச் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் ஆழ்வார்பேட்டை, நந்தனம், அபிராமபுரம், மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் தொடர்பான புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 8144930909 மற்றும் 8144930225 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணன், தம்பி பலி

செங்கல்பட்டு, மே 12- செங்கல்பட்டு அருகே பரனூர் மேம்பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், தொழுப்பேட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் (30) மற்றும் அவரது தம்பி கவியரசன் (26) ஆகிய இருவரும் சென்னையில் முறையே கட்டுமான மற்றும் மின்சாரத் துறையில் பணியாற்றி வந்தனர். வார விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவர்கள், பரனூர் மேம்பாலம் அருகே தொலைபேசி அழைப்பைப் பேசுவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய கேரளாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆனந்த் மீனாட்டூரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை

சென்னை, மே 12- விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் தொடங்கப்பட்ட கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், தற்போது தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் நடைமேடை பகுதிகளில் கூட்டமாகச் சுற்றும் நாய்கள், உணவகக் கழிவுகளைத் தின்றுவிட்டு பயணிகளை நோக்கி குரைப்பதாலும், துரத்துவதாலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் உடைமைகளுடன் செல்லும் பயணிகளை நாய்கள் குறிவைப்பதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்துப் பேசிய முனையப் பொறுப்பு அதிகாரி பால் ராஜ்குமார், நாய் கடி சம்பவங்கள் குறித்துத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாகவும், நாய்களைக் கட்டுப்படுத்த தாம்பரம் மாநகராட்சியின் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். சட்ட விதிகளின்படி நாய்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்பதால், அடுத்த வாரம் முதல் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.