பயணிகளுக்கு இடையூறு செய்தால் கடும் அபராதம்: சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
10 Jul 2026, 2:01 pm
<p>சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, செல்போனில் உரத்த குரலில் பேசுதல், ஹெட்போன் பயன்படுத்தாமல் இசை கேட்பது அல்லது வீடியோக்களை ஒலியுடன் பார்ப்பது, மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலைய வளாகங்களில் ஒலிபெருக்கி வசதிகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இதுவரை நடைமுறையில் இருந்த அபராதத் தொகை உயர்த்தப்பட்டு, இனி குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>பயணிகளின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சுகமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பயணிகளும் மெட்ரோ விதிமுறைகளைப் பின்பற்றுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.</p>
