சென்னை விரைவு செய்திகள்
11 May 2026, 1:41 am

சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் நடவடிக்கை எடுக்க எண்ணை நிறுவனங்கள் எச்சரிக்கை

சென்னை, மே 10- தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் தவறும் ஏஜென்சிகள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச சூழலால் மார்ச் மாதத்தில் நிலவிய இறக்குமதி இடர்ப்பாடுகள் தற்போது முழுமையாகச் சீரடைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை முகவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே விதிகளை மீறிய 76 ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சூழலில், ரகசிய குறியீடு முறை மூலம் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கூடுதல் கட்டணம் மற்றும் பதுக்கல் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அரும்பாக்கம் அருகே 445 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, மே 10- சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தியதாகக் கொடுங்கையூரைச் சேர்ந்த வெற்றிவேல் (45) என்பவரைச் சூளைமேடு போலீசார் கைது செய்தனர். மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், கிடைத்த ரகசியத் தகவலின்படி நடத்திய வாகன சோதனையில் கடத்தலை முறியடித்தனர். இதில் ஒரு ஆட்டோ மற்றும் இலகுரக சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 445.5 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது குறித்து மேலதிக விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

பராமரிப்பின்றி சீரழியும் மியாவாக்கி பூங்கா: பொதுமக்கள் அச்சம்

சென்னை, மே 10- சென்னை திரு.வி.க. நகரில் உள்ள மியாவாக்கி காடு முறையான பராமரிப்பின்றி குப்பைமேடாக மாறி வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பூங்கா பூட்டப்பட்டுள்ளதால், அங்கு மது பாட்டில்கள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதுடன், சமூக விரோதச் செயல்களும் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்கிருந்து வரும் பாம்புகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாம்புகளைப் பிடிக்கவும், இடத்தை சீரமைக்கவும் மண்டல துணை ஆணையர் எச்.ஆர்.கௌசிக் உறுதியளித்துள்ளார்.

போலி நகைகளை அடகு வைத்து ரூ.12 லட்சம் மோசடி நகை வியாபாரி கைது

சென்னை, மே 10- சென்னையில் போலி நகைகளை அடகு வைத்து பல்வேறு வங்கிக் கிளைகளில் ரூ.12 லட்சம் மோசடி செய்த நகை வியாபாரி ரமேஷ் சோனி மற்றும் அவரது கூட்டாளி தமிழ்செல்வன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கெல்லீஸ் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி கிளையில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றபோது, நகைகள் தரம் குறைந்தவை எனத் தெரிந்து வங்கி நிர்வாகம் கடன் வழங்க மறுத்தது. அப்போது வசூலிக்கப்பட்ட ரூ.500 மதிப்பீட்டுக் கட்டணத்தைத் திரும்பக் கேட்க இருவரும் மீண்டும் வங்கிக்கு வந்தபோது, சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், இவர்கள் ஏற்கனவே புரசைவாக்கம் மற்றும் சூளை கிளைகளில் போலி நகைகளை அடகு வைத்து முறையே ரூ.7 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. இதனையடுத்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் தாக்கி தனியார் மருத்துவமனை ஊழியர் பலி

சென்னை, மே 10- சென்னை நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (66). இவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சாலையை கடக்கும் போது அங்கிருந்த மின்விளக்கு கம்பத்தை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்தக் காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர் கிருஷ்ணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கட்டணச் சலுகை: குளறுபடிகளால் உணவக உரிமையாளர்கள் அவதி!

சென்னை, மே 10- வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின் அடுப்புகளுக்கு மாறிய உணவகங்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தகுதியான உணவகங்களைக் கண்ட றிந்து தரவுகளைப் பதிவேற்றுவதில் மின்வாரிய ஊழியர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், மின் பயன்பாட்டு ரசீதுகள் வழங்கப்படுவது தாமதமாகிறது. இதனால், ரசீது கிடைத்த மிகக்குறுகிய காலத்திற்குள் பணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்திற்கான ரீடிங் எடுக்கப் பட்டு, மே முதல் வாரத்தில் ரசீது வழங்கப்பட்ட நிலையில், நான்கு நாட்க ளுக்குள் பணம் செலுத்தக் கோருவது சிறு உணவகங்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது ஒருமுறை மட்டுமே நடைபெறும் சரிபார்ப்புப் பணி என்பதால், அடுத்த முறை முதல் காலதாமதம் இருக்காது என மின்வாரியத் தரப்பில் விளக்க மளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரசீது வழங்குவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், கட்டணம் செலுத்தக் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சிபிசிஎல் சாதனை கடந்த நிதியாண்டில் 11.71 மில்லியன் டன் கச்சா எண்ணை சுத்திகரிப்பு

சென்னை, மே 10- சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் , 2026 மார்ச் 31-உடன் முடி வடைந்த நிதியாண்டில் 11.71 மில்லியன் டன் கச்சா எண்ணைச் சுத்திகரிப்பு செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறனில் 112 சதவீத செயல்பாடாகும். திட்ட மிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடை பெற்ற போதிலும், மணலி சுத்திகரிப்பு நிலை யத்தில் உள்ள மூன்று அலகுகளும் தடை யின்றி இயங்கியதே இந்தச் சாதனைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் போன்ற மதிப்புமிக்க பொருட்களின் உற்பத்தித் திறன் 78 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்ப தால், கச்சா எண்ணெயைத் தேர்வு செய்வ தில் உள்ள கூடுதல் வாய்ப்புகளும், 160-க்கும் மேற்பட்ட வகை கச்சா எண்ணெய்களைப் பயன்படுத்தும் வசதி யும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரண மாக அமைந்தன. கச்சா எண்ணெய் சுத்தி கரிப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பில் சிபிசி எல் காட்டிய முனைப்பு, அதன் செயல் பாட்டுத் திறனைப் பறைசாற்றும் வகை யில் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

தரிசு நிலம் ஆக்கிரமிப்பு புகார் எதிரொலியாக ஆணையம் விசாரணை

திருப்போரூர், மே 10– திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் கிராமம், ஜே.ஜே., நகர் பகுதியில், பெரும்பாலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் சொந்த நிலம் மற்றும் வீடு இல்லாத காரணத்தினால் வாடகை வீட்டில் வசித்து, வாடகை கொடுக்கமுடியாத சூழலில் வாழ்துவருகின்றனர். சர்வே எண் 34/2எ ல், 1.40 ஏக்கர், சர்வே எண் 37/1 ல், 1 ஏக்கர் தரிசு புறம்போக்கு வகைபாடு உள்ளது. இந்த நிலம் தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து அவர்கள் வேலி போட்டுள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி ஏழை, எளிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு மேற்கண்ட இடத்தினை பிரித்து கொடுத்து இலவச பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், இந்த கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி., விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் விநாயகம் புகார் மனு அளித்துள்ளார். மனுவை விசாரித்த, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், மனுதாரர் உள்ளிட்டோர் வரும் 15 ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.