சென்னை விரைவு செய்திகள்
5 Jun 2026, 11:42 pm

விஐடி மொரீஷியஸ் மாணவர்களுக்கு வேந்தர் ஜி.விஸ்வநாதன் உதவி

'வேலூர், ஜூன் 5- மொரீஷியஸ் விஐடி மையத்தில் முதலாண்டு பி.டெக் முடித்த இந்திய மாணவர்கள், ‘ஸ்வான்’ மற்றும் ‘எஸ். மொரீஷியஸ்’ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் ஊதியத்துடனான தொழில் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பயிற்சிக்குத் தேர்வான மாணவர்களுக்கு விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் உதவித்தொகை வழங்குகிறார். மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்கள் ‘டெக்வேவ்’ கருத்தரங்கை நடத்தியதுடன், தேசிய அளவிலான ஹேக்கதான்கள் மற்றும் விஐடி - சான்டிஸ்க் ஹேக்கதானில் முதல் 50 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஏஎன்ஆர்எப் நிதியுதவியுடன் இந்தியாவில் நடந்த என்எலெக்ஸ் மாநாடுகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளனர். இத்தகைய நடைமுறைப் பாடத்திட்டம் மாணவர்களை உலகளவில் உயர்த்துவதாகவும், தகுதி அடிப்படையில் தொடர்ந்து உதவித்தொகை வழங்க வேந்தர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விவரங்களுக்கு www.vitmauritius.mu என்ற இணையதளத்தைக் காணலாம்.

700 போதை மாத்திரைகளுடன் அயனாவரத்தில் வாலிபர் கைது

சென்னை, ஜூன் 5- சென்னையில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்து வந்த அலீம் ஜோசுவா என்கிற சீமன் (29) என்பவரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 700 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். முன்னதாக, அயனாவரத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 15 வழக்குகளுடைய குற்றவாளியான சங்கர் பாய் (29) என்பவரைப் போலீசார் கைது செய்து, 100 போதை மாத்திரைகள் மற்றும் 1.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளியான சீமனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சங்கர் பாய் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவான சீமனை, தனிப்படை போலீசார் வந்தவாசி அருகே உள்ள பொன்னூர் கிராமத்தில் வைத்துக் கைது செய்தனர்

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

வேலூர், ஜூன் 5- காட்பாடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்க்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் வேல்முருகன் தலைமையில் விவசாயிகள் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், காட்பாடி பகுதியில் கோமாரி நோய் தாக்குதலால் ஏராளமான கால்நடைகள் இறப்பதைத் தடுக்கத் தகுந்த தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மழைக்காலம் தொடங்கும் முன் வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்க வேண்டும், வேளாண் அலுவலகத்தில் போதிய விதைகள் இருப்பு வைக்க வேண்டும், நீர்வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும், வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க வேண்டும் மற்றும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

மேம்பாலப் பணி: ஆர்.கே.நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஜூன் 5- மேம்பாலம் கட்டும் பணிக்காக சென்னை ஆர்.கே.நகரில் சனிக்கிழமை (ஜூன் 6) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆர்.கே.நகர் வைத்தியநாதன் பாலம் முதல் ஆர்.கே.நகர் சந்திப்பு வரை மேம்பாலம் கட்டும் பணி ஜூன் 6ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஐஓசிஎல்-லில் இருந்து கொருக்குப்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் வைத்தியநாதன் மேம்பாலத்தில் இடதுபுறம் திரும்பி டிஎச் சாலை வழியாக கொருக்குப்பேட்டை சந்திப்பை அடையலாம். ஆர்.கே.நகர் புதிய மேம்பாலத்தில் இருந்து ஐஓசிஎல் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் ஆர்.கே. நகர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் வழியாக டிஎச் சாலை சென்று, வைத்தியநாதன் மேம்பாலத்தில் வலதுபுறம் திரும்பி ஐஓசிஎல் சந்திப்பை அடையலாம். மீனாம்பாள் மேம்பாலம் வழியாக ஐஓசிஎல் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் கேஎன்எஸ் டெப்போ வலதுபுறம் அல்லது ஆர்.கே. நகர் சந்திப்பு இடதுபுறம் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஐஓசிஎல் சந்திப்புக்கு செல்ல வேண்டும். பேசின் மேம்பாலம் மூலக்கொத்தளம் வழியாக ஐஓசிஎல் செல்லும் அனைத்து பேருந்துகள், கனரக வாகனங்களும் நேராக மின்ட் சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி கண்ணன் ரவுண்டானா, டிஎச் சாலை, வைத்தியநாதன் மேம்பாலம் மற்றும் ஐஓசிஎல் அடையலாம். மூலக்கொத்தளம் வழியாக ஐஓசிஎல் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் ஆர்.கே. நகர் சந்திப்பு இடதுபுறம் திரும்பி சுண்ணாம்பு கால்வாய் சாலை, அன்னை சத்யா நகர் வழியாக வலதுபுறம் திரும்பி ஐஓசிஎல் சந்திப்பை சென்று அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கக் கடன்கள், வீட்டுக் கடன்கள் தேவை தொடர்ந்து அதிகரிப்பு ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை, ஜூன் 5- இந்தியாவின் சில்லறை கடன் சந்தை நடப்பு நிதியாண்டில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக உலகின் முன்னணி தரவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ்பீரியன் தனது ‘இண்டஸ்ட்ரி இன்சைட்ஸ் – மே 2026’ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 19% உயர்ந்து ரூ. 137 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. புதிய கடன் விநியோகம் 31% அதிகரித்து ரூ. 75 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. தங்கக் கடன்கள், வீட்டுக் கடன்கள் போன்ற பிணையத்துடனான கடன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, தங்கக் கடன்கள் முதல்முறை கடன் பெறுபவர்களை முறையான வங்கி அமைப்பிற்குள் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதேபோல், மந்தமாக இருந்த தனிநபர் கடன்கள் மற்றும் நுகர்வோர் நிதித் திட்டங்கள் இந்த நிதியாண்டில் வலுவான மீட்சியைப் பெற்றுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் கடன் பெறுவது எளிதாகியுள்ளது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் போக்கு மேம்பட்டு, நிலுவைத் தொகை விகிதம் 3.0% ஆகக் குறைந்துள்ளது. இது கடன் வாங்குபவர்களிடையே அதிகரித்துள்ள நிதி ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால், தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியக் கடன் சந்தை நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.