சென்னை விரைவு செய்திகள்
20 May 2026, 1:10 am

கொரியர் மூலம் போதைப் பொருள் விற்பனை: ஒருவர் கைது

கடலூர், மே19- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே தொழுதூர் - தச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் பாலாஜி ஏஜென்சிஸ் என்ற கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை கொரியர் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார், பாலாஜி ஏஜென்சிஸ் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் பசம்பலூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் அருள்ராஜ் (வயது38) என்பவர், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொட்டலங்களை மொத்தமாக கொரியர் மூலம் வாங்கி சுற்றுவட்டார பகுதிகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. மேலும், கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 87 கிலோ மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராமநத்தம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அருள்ராஜ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்

திருவண்ணாமலை,மே 19- வேலைவாய்ப்பு பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவரும் மேற்குறிப்பிட்ட சேவைகள் பெற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுரை

கள்ளக்குறிச்சி, மே 19 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெப்ப அலைகள் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதாரத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெப்ப அலை பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெப்பம் அதிகரிக்கும்போது பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களும், 65 வயதிற்கு மேல் உள்ளவர்களும், வெளியில் வேலை செய்பவர்களும் என வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரத்தில் வெளியில் செல்பவர்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் வெப்ப அலை பாதிப்பு அறிகுறிகள் மற்றும் வெப்ப அலை பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும்,வெப்ப அலை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வெயில் காலங்களில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் குறித்தும், பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,மின்சாரவாரியம் சார்பில் அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்/ நிர்வாகி கச்சிராப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் லதா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த்குமார் சிங்,மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.