சென்னையில் இருமடங்கான டெங்கு பாதிப்பு: காய்ச்சல் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்!
yesterday

சென்னையில் டெங்கு பாதிப்பு ஒரு மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் கடந்த வாரம் வரை சுமார் 18 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,290ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசை வலி, சருமத்தில் தடிப்புகள் உள்ளிட்டவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளாகும். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய மருத்துவச் சிகிச்சை பெற்றால் டெங்குவை கட்டுப்படுத்தி குணப்படுத்த முடியும்.

டெங்குவைத் தடுக்கும் வழிமுறைகள்:

வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், உடைந்த பொருட்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

குடிநீர்த் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற தண்ணீர் தேக்கங்களை அகற்ற வேண்டும்.

கொசு கடிப்பதைத் தவிர்க்க முழுக்கை ஆடைகளை அணிவதுடன், கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.