ஆபத்தான விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை
21 Jun 2026, 1:39 am
<p><strong>ஆபத்தான விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை </strong></p><p>சென்னை, ஜூன் 20- சென்னையில் கடந்த வியாழக்கிழமை பெய்த மழையின் போது பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் சரிந்து விழுந்து பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவற்றை அகற்றும் தீவிரப் பணியை உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கியுள்ளன. மதுரவாயலில் பேருந்து நிறுத்தம் அருகே மின் கம்பத்தின் மீது ராட்சத இரும்பு விளம்பரப் பலகை சரிந்து விழுந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து, அந்த விளம்பரப் பலகையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சரிந்து விழுந்த அரசியல் மற்றும் தனியார் பேனர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை முதல் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவற்றை அகற்றுவதற்கும், எடுத்துச் செல்வதற்குமான கட்டணங்களை சதுர அடி மற்றும் வாகனங்களின் அடிப்படையில் மாநகராட்சி நிர்ணயித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த செலவு மற்றும் அபராதத் தொகை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் அல்லது நில உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் ஆணையர் எச்சரித்துள்ளார்.</p>
