செம்பரம்பாககம் புதிய காலனி கிராமத்தில் நியாய விலைக்கடை தேவை! பொருள் வாங்க இருப்பு பாதையை கடக்கும் அவலம்
24 Jun 2026, 1:15 am

செம்பரம்பாககம் புதிய காலனி கிராமத்தில் நியாய விலைக்கடை தேவை! பொருள் வாங்க இருப்பு பாதையை கடக்கும் அவலம்

காஞ்சிபுரம், ஜூன் 23- காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் புதிய காலனி கிராம மக்கள் தங்களுக்கு எனத் தனியாகப் பொது விநியோகக் கடை (ரேசன் கடை) அமைத்துத் தரக் கோரி அதிகாரிகளுக்குக் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘ரெட்டைமலை சீனிவாசன் நகர்’ எனப் பெயரிடப்பட்ட இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட எளிய கூலித்தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், போதிய குடும்ப அட்டைகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி புதிய கடை அமைப்பதற்கான மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அன்றாடத் துயரமும் பெண்களின் சிரமமும்

தற்போது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இப்பகுதி மக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து கிராமத்திற்குச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் கடுமையான காலங்களிலும் கூட, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்தத் தூரத்தைக் கடந்துதான் பொருட்களை வாங்கி வருகின்றனர். குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஆண்கள் வேலைக்குச் சென்றுவிடும் பட்சத்தில், வீட்டில் இருக்கும் பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று கனமான ரேஷன் பொருட்களைத் தூக்கி வருவது பெரும் சிரமமாக மாறியுள்ளது.

விபத்துகளும் உயிரிழப்புகளும்

இவை அனைத்தையும் விட மிக முக்கியமாக, பக்கத்து கிராமத்திற்குச் சென்று பொருட்களை வாங்க மக்கள் திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையையும், அதோடு ரயில்வே தண்டவாளப் பாதையையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து ஆரிய பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி குமார் தொடர்பு கொண்டபோது தலித் மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இப்பகுதியில் இருந்து மக்கள் ரேசன் பொருட்களை வாங்கத் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, எண்ணற்ற சாலை விபத்துக்கள் ஏற்பட்டுச் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன என்றும், பலர் கை, கால்களை இழந்து ஊனமாகிப் போனது பெரும் வேதனைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்ட எச்சரிக்கை

இப்பகுதிக்குத் தனி ரேஷன் கடை கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், கீழ் அம்பி கூட்டுறவு வங்கி நிர்வாகத்திற்கும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், கிராம மக்களைத் திரட்டிப் பெரிய அளவில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஊராட்சி மன்றத் தலைவர் எச்சரித்துள்ளார். மேலும், தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு இந்த மக்களின் நிலையை உணர்ந்து, உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். - ந.நி