என்றென்றும் எங்கெங்கும் ‘சே’ - மைதிலி சிவராமன்
13 Jun 2026, 9:13 pm

என்றென்றும் எங்கெங்கும் ‘சே’ - மைதிலி சிவராமன்

தொப்பியில், டீசர்ட்டில், கைமேல் குத்தியிருக்கும் பச்சையில், பிடித்திருக்கும் கொடியில், விநியோகித்த துண்டறிக்கையில், தலையில் கட்டியிருக்கும் கைக்குட்டையில், கைப்பையில், தேசப் படங்களில் என எங்கெங்கும் சேகுவேரா, சேகுவேரா.

சே என்ற வெறித்தனம் உலகம் முழுமையும் பரவியுள்ளதன் அடையாளமே, எங்கெங்கும் சே. உலகின் மூலை முடுக்கிலிருந்து வந்த அனைவரையும் இணைக்கும் ஒரு பொது மொழி சே.

சேகுவேரா என்ற பெயரைப் பாடினால் போதும்; மக்கள் கடல் போல ஓலமிட்டு அலை மோதினார்கள். சேகுவேராவுடன் இருந்தவர்கள், உணவருந்தியவர்கள், குழந்தைகள் யாரேனும் வந்தாலே போதும், மக்கள் நீண்ட கரவொலி எழுப்பினர். “இன்னும் கொஞ்சம், மேலும் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று அவர்களைத் தொந்தரவு படுத்தினர்.

சேகுவேரா உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயம் கிடைத்தால் போதும்; செலவிடாமல் அதனைப் பத்திரமாகச் சட்டைப்பையில் போட்டுக் கொள்வர். அவரது கையெழுத்து இருக்கும் பொருள் எதைக் கண்டாலும் மிகவும் கவனத்துடன் வைத்துக் கொள்வர். சேகுவேரா வயலில் கரும்பு வெட்டும் கேலிச்சித்திரம் இருந்த கியூபன் பெசோ நோட்டுகளைப் பத்திரப் படுத்துபவர், மொழி புரியாதிருந்தாலும் சேகுவேரா பிரோசரைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர், அவரது புகைப்படத்துடன் புத்தகம் வெளிவந்தால் திடீரென்று அதனைப் பெற மொய்ப்பவர்கள், சேகுவேராவின் படம் போட்ட கார்டுக்காக ஹவானாவின் வீதி வீதியாகச் சுற்றி அலைபவர்கள், அவரது வீடியோ கேசட்டிற்காகச் சட்டைப்பையில் இருக்கும் ஒரு சில டாலர்களையும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் எடுத்துக் கொடுப்பவர் என இவர்களே சேகுவேரா என்றால் உலக மொழி என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சூரியன், ஒரு சந்திரன் இருப்பதைப் போலவே, ஒரு சேகுவேராவும் இருக்கிறார்.

சாம்ராஜ்யங்களின் நடுக்கம்

பிரிட்டனின் சிறையில் இருந்த ஓர் ஐரிஷ் அரசியல் கைதி, தனக்குச் சேகுவேரா டீசர்ட் ஒன்று வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். சேகுவேராவின் அன்பைப் பிரிட்டன் முழுவதும் பரப்ப இருந்த இளைஞர்கள் அந்த டீசர்ட்டுகளுடன் சிறைக்குச் சென்றபோது, அங்குள்ள அதிகாரிகள் அதனைத் தடுத்துவிட்டனர். காரணம் கேட்டபோது, அதில் அரசியல் பிரச்சாரம் உள்ளது என்றனர். சேகுவேரா இறந்து 30 ஆண்டுகள் ஆகி இருந்தாலும், உலகின் சாம்ராஜ்யவாதிகளின் இதய நடுக்கம் இன்னும் நிற்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாயிற்று. மக்களுக்கு அது ஏதோ சித்திரம் மட்டுமல்ல; அது ஒரு மாபெரும் அறைகூவலுமாகும்.

தென் ஆப்பிரிக்காவின் தந்தை

தந்தை நெல்சன் மண்டேலா, கியூபா கொடுத்த நட்பின் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ள வந்தபோது சொன்னார்: “இந்த உலகின் எந்தச் சிறைச்சாலைக்கும், தணிக்கையிடும் அதிகாரம் உள்ள நிறுவனத்திற்கும், சேகுவேராவை நம்மிடமிருந்து தூரப்படுத்துவது முடியாத ஒன்றாகும்.” இது சரியே என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சே, உலக இதயத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் அன்பின் பதக்கம். நெஞ்சில் காவியமும், கையில் ஆயுதமும் ஏந்திய இந்தச் சேகுவேரா மக்களின் இதய வயல்களில் இணைந்து போனதுதான் எப்படி? பெடல்ஸ் மன்னன் தனது அன்புமிகு காதலிக்கு, தான் சைக்கிள் மிதிக்கும் படத்தின் மீது “ஃபிரம் தி கிங் ஆஃப் பெடல்ஸ்” (பெடல்ஸ் மன்னனிடமிருந்து) என்று கையெழுத்திட்டு அனுப்பி இருந்தான். மருத்துவர், “ஆஸ்துமா இருக்கிறது, தினமும் ஒரு சிகரெட் மாத்திரம் பிடியுங்கள்” என்றபோது, “சிகரெட் தொழிற்சாலையிடம் மூன்று சிகரெட்களைச் சேர்த்து ஒரே சிகரெட்டாகச் செய்யச் சொல்லுங்கள். நீங்கள் கூறுவது போலச் செய்கிறேன் டாக்டர்” என்றான்.

நண்பன் ஒருவன், “புரட்சி செய்யலாம் வா” என்று கல்லூரியிலிருந்து அழைத்து வந்தபோது, வழியில் கிடைத்த டிரக்கில் கள்ளத்தனமாகப் பின்புறம் உட்கார்ந்து, ஊர் விட்டு ஓடிப்போனான். “ஆஸ்துமா இருக்கிறது கவனமாக இருங்கள்; எப்போதும் இன்ஹேலர் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்” என்று மனைவி சொன்னபோது, ‘சரி’ என்று சொல்லிவிட்டு கவிதை நூலைப் பத்திரமாக வைத்துக் கொண்டவன். வைத்தியம் கற்றிருந்ததால், ராணுவத்தில் மருத்துவராகச் சேர வேண்டிய நிலை வந்தபோது, தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து, ஆஸ்துமாவுடன் மருத்துவமனையில் சேர்ந்து ராணுவத்திலிருந்து தப்பித்துக் கொண்டான். போலீசாரிடம் அகப்பட்டுக் கொண்டபோது, போலீசாரின் அணி அமைத்து, கால்பந்து கற்றுக் கொடுத்து, சபாஷ் பட்டம் பெற்று அங்கிருந்து ஓடினான். பான் அமெரிக்க ஒலிம்பிக்ஸைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி, அதற்காகப் பேனா பிடித்துப் பத்திரிகை ஆசிரியரானான். சியார்ரா மாஸ்ட்ரா குன்றுகளில், காயம்பட்ட கொரில்லா வீரர்களின் முறிந்த எலும்புகளைச் சரியாக அமைத்துக் கட்டுப்போட்டான். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து, கெட்டியான சவாரிக்கு இந்தச் சைக்கிளையே பயன்படுத்துங்கள் என்று விளம்பரத்தில் காட்டிக் கொள்வான். “உன்னுடைய புகைப்படத்தை மறந்து போய் எடுக்காமல் வந்துவிட்டேன்; உடனே அனுப்பி வை” என்று முகவரி இல்லாத குன்றுகளில் இருந்து கடிதம் போடுவான். என்றென்றும் கவியாகாத புரட்சியாளன் என்று நொந்துபோய்த் தன்னை வருணித்துக் கொண்ட சேகுவேரா, உலகின் எல்லா இளைஞர்களின் நற்குணங்களின் அழகிய கலப்பாக அமைந்தவனாவான். இலக்கியத் தோழன் இலக்கியம் எப்போதுமே சேகுவேராவின் தோழன். பிடல் காஸ்ட்ரோ, சியார்ரா மாஸ்ட்ரா மலைக் குன்றுகளில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, இவனுக்குத் தோழர்களாக இருந்தவை ஒரு துப்பாக்கியும் ஒரு கவிதை புத்தகமுமாகும். மரத்தின் மேல் ஏறி ராணுவத்தினர் வருகிறார்களா பார் என்றால், மரத்தின் மேல் அமர்ந்து பைனாகுலரில் கூர்ந்து கவனிப்பதை விட்டுவிட்டு, நெருடாவின் கவிதைத் தொகுப்பில் மூழ்கிப்போவான். மீண்டும் புரட்சி நடத்தக் கியூபாவிலிருந்து பொலிவியாவிற்குப் போகும்போது, தோழனிடமிருந்த நெருடாவின் கவிதையிலிருந்து விடைபெறும் கவிதையை எழுதி வைத்துக் கொண்டான்.

சியார்ரா மாஸ்ட்ரா குன்றுகளில் போராடிக்கொண்டிருந்தபோது, காயம்பட்டு மருத்துவமனையில் சேர வேண்டும் என்று வந்த தோழனிடம், “யாருக்கும் தெரியாமல் புதிதாக வந்திருக்கும் கவிதை நூல்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்துவிடு” என்றான். குவாதமாலாவில் உண்ணப் பணமில்லாதபோது, ஒரு புத்தகக் கடையில் சே வேலைக்குச் சேர்ந்துகொண்டான். புத்தகங்களைச் சுமந்து வீதி வீதியாகத் திரிந்து விற்க வேண்டி இருந்தது. நான்கு நாள் கவனித்த கடை முதலாளி, “புத்தகம் விற்றதைவிடப் படித்ததே அதிகம்” என்று வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

போதிலேர், வெலேன், கார்சியாலோர்க்கா, ஆண்டோனியோ மகாடோ ஆகியோருடைய கவிதைகள் சேவிற்கு மிகவும் நண்பர்களாகிவிட்டன. சேவை வெறிபிடித்து நேசித்த மக்கள், ‘அன்பு’ என்னும் பட்டத்தைச் சேவிற்கு விருதாக அளித்தார்கள். அதுவரைக்கும் எர்னஸ்டோ குவே ராவாக இருந்த இவன், சேகுவேரா ஆனான். சே என்றால் அன்பு என்று பொருள். எந்த நாடாக இருந்தாலும், அங்கு போராட்டங்கள் நடந்தால் அங்கே சேவின் படம் இருக்கும். இங்கிலாந்தில் சேகுவேராவின் அன்பைப் பரவச் செய்ய “ராக் அரௌண்ட் தி பிளாக்கேடு” என்ற இயக்கம் உருவானது. சிறையிலும் சேவின் டீசர்ட் வழங்க விரும்பியவர்கள், சேவின் மகள் வந்தபோது பூமாரி பொழிந்து வரவேற்றவர்கள், தங்களின் பிள்ளைகளுக்குச் சேகுவேரா என்று பெயரிட்டவர்கள், சே பற்றி புத்தகம் எழுதியவர்கள், சித்திரம் தயாரிப்பவர்கள், “நான் சேகுவேராவின் அன்பிற்குப் பாத்திரமானேன்” என்று சொல்லி சிஐஏ பதவியைத் துறந்து வந்தவர்கள் என இத்தகைய யாவரும் சேகுவேராவின் அன்பில் விழுந்தவர்கள். “அன்பின் வழியது உயிர்நிலை” என்பதற்குச் சேகுவேரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அமைச்சர் ஆனாலும் ஏழைப் பங்காளன்

கியூபாவில் புரட்சி செய்து தொழில் துறை அமைச்சரானாலும் கூட, சேகுவேரா ஏழைப் பங்காளனாகவே இருந்தார். ஞாயிற்றுக்கிழமை வந்தால் போதும், மூன்று வயது தாண்டியிராத மகளையும் அவளது அன்பிற்குரிய நாயையும் வண்டியில் அழைத்துக் கொண்டு கரும்பு வயல்களுக்குப் போய்விடுவார். வெட்டிப் போட்டிருக்கும் கரும்புக் குவியலின் மேல் மகளை உட்கார வைத்துவிட்டு, அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவார். அப்போது கரும்பை ஏற்றிச்செல்லும் டிராக்டரின் டிரைவர் நிழலில் உட்கார்ந்திருக்க, “இங்குள்ள ஒவ்வொருவரும் டிராக்டர் ஓட்டத் தகுதியுடையவரே, ஆனால், அவர்கள் எல்லாம் இப்போது கரும்பு வயலில் உள்ளனர். கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு வா, டிராக்டர் புறப்பட இன்னும் வேண்டிய நேரம் உள்ளது” என்பார்.

வெளிநாட்டில் வியாபாரப் பேச்சுவார்த்தைக்காகச் சென்றபோது, பேச்சுவார்த்தையின் நடுவே வாயில் போட்டுக்கொள்ளச் சாக்லேட் கொண்டு வந்து வைத்தனர். தொழில்துறை அமைச்சரின் அலுவலக மேலாளர் ஏஞ்சல் ஆர்கோஸ் பர்க்கானஸ், வீட்டில் உள்ள சிறு குழந்தையை நினைத்துக் கொண்டு சட்டைப்பையில் கொஞ்சம் சாக்லேட்டுகளை எடுத்துப் போட்டுக் கொண்டார். அருகில் வந்த சேகுவேரா சொன்னார்: ‘கட்டுப்பாட்டின் கடும் ஒழுங்கு வீட்டிற்கு வெளியே இருப்பது போலவே, வீட்டிற்கு உள்ளேயும் இருக்க வேண்டும்.’ உடனே சாக்லேட் மீண்டும் தட்டிற்கு வந்து சேர்ந்தது. உலகின் எந்த மூலையானாலும், அங்கெல்லாம் நடக்கும் அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்து நின்றால் “நீதான் எனது தோழன்” என்றார் சே. கொடுமைகளுக்கு இடையில் வளர்ந்தவர்கள், அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய நாடுகள், உலகின் மூலை முடுக்கெங்கும் வலியினை அனுபவித்த எல்லோரும் சேகுவேராவின் தோழர்களாகிப் போனார்கள். அல்லற்பட்டு ஆற்றாது அழுதோரின் கண்ணீரைத் துடைப்பவன் சே. ‘பறக்கும் பறவைக்கு நிலை எங்கே?’ என்றார் சேகுவேரா. சேகுவேரா ஒரு நாடோடிப் பறவை. ஏதோ ஒரு நாட்டில் இருந்து சிறகடித்துப் பறந்து, இன்னொரு நாட்டிற்குச் சென்று, அங்குள்ள பறவைகளுடன் திரிந்து, கூடுகட்டி, குஞ்சு பொரித்து, எழுவதையும் விழுவதையும் பறப்பதையும் கற்றுக் கொடுத்து, மீண்டும் எங்கோ படை திரட்டிக்கொண்டு பறந்து போகும் பறவை.

‘புதிய போர்க்களத்தில் எனது இதய வயலில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சுமந்து போராடுகிறேன்’ என்று ஃபிடலுக்குக் கடிதம் எழுதிய சே, “நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த எல்லாவற்றுக்கும், வகுத்துக் கொடுத்த பாதைக்கும் கடன்பட்டுள்ளேன்” என்றார். நண்பர் ஆல்போர்டோ கிரேனெடாஸ் என்பவருக்குக் கடிதம் எழுதினார்: ‘நான் கரும்பு வெட்டுவதற்குப் போகிறேன், என்னுடைய ஓய்வு விடுதி எனது இரு கால்களையே நம்பியுள்ளது.’ பறவை பொலிவியா பக்கம் பறந்தது.

நீ எங்கெங்கும் இருக்கிறாய் சே... இந்தியர்களின் கனவில், தாமிரத்தில், நீக்ரோக்களில், உப்பு உற்பத்தியாளர்களில், எண்ணெய் எடுப்பவர்களில், சர்க்கரையில், உப்பில், காபியில்...

கவிதை எழுதத் தெரியாதவனிடம் கவிதைகளே பெருக்கெடுத்து வந்தன. ஹவானாவின் தொழிலாளர் காலனியில் இரவாகியிருந்தது. மக்களின் கூட்டம் கூடியிருந்தது. அந்த மக்கள் நாளெல்லாம் உழைத்து வந்தவர்கள். வானத்தில் சந்திரன் ஒளி வீசிக் கொண்டிருந்தது. சிந்தன கௌடா பாட்டில் பெருத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்:

மண்ணுலகின் மேல் சூரியன், சந்திரன் இருக்கும் மட்டும் உனது பெயர் அழியாது சேகுவேரா, சேகுவேரா!

(2005 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான ஆளுமைகளில் ஒருவர், பெண்ணுரிமை இயக்கத்தின் மகத்தான போராளி மறைந்த தோழர் மைதிலி சிவராமன் எழுதிய கட்டுரை)