மாறும் ரசனைகளும்... மாறாத அன்பும்... சூடுபிடிக்கும் காதலர் தின விற்பனை!
11 Feb 2026, 5:52 pm
<p><strong>மாறும் ரசனைகளும்... மாறாத அன்பும்... சூடுபிடிக்கும் காதலர் தின விற்பனை!</strong></p>
<p>பிப்ரவரி மாதம் என்றாலே காற்றில் அன்பின் நறுமணம் கமழத் தொடங்கிவிடும். உலகின் மிக உயரிய உணர்வான ‘காதலை’ கொண்டாடும் பிப்ரவரி 14-ஐ முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை தற்போது களைகட்டியுள்ளது. ஒரு காலத்தில் வண்ண வாழ்த்து அட்டைகளில் கவிதை வடித்த காலம் மறைந்து, இன்றைய ‘Z-Generation’ இளைஞர்கள் கலைநயமிக்க, தனித்துவமான மற்றும் பயனுள்ள பரிசுப் பொருட்களையே அதிகம் நாடுகின்றனர். இதுகுறித்து குமாரபாளையம் சாலை வணிகர் சரவணன் கூறுகையில், “பழைய வாழ்த்து அட்டை கலாச்சாரம் விடைபெற்றுவிட்டது. இன்றைய இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட மெத்தைகள் (Cushions), காபி கோப்பைகள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவற்றைத் தேடி வந்து வாங்குகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப ரூ.50 முதல் ரூ.500 வரை விதவிதமான பொருட்களைக் குவித்து வைத்துள்ளோம். இந்த 15 நாள் வியாபாரம் எங்களுக்குப் பெரும் ஊக்கம் அளிக்கிறது,” என்கிறார். காதலர் தினம் இளைஞர்களுக்கு மட்டுமேயானது என்ற பிம்பத்தை நாமக்கல் கடைவீதிகள் உடைக்கின்றன. 60 வயதைக் கடந்த முதியவர்கள் கூடத் தங்கள் ஆயுட்காலத் துணைவிக்காகவும், பேரக் குழந்தைகளுக்காகவும் ஆசையுடன் பரிசு வாங்குவது, அன்புக்கு வயதில்லை என்பதை நெகிழ்ச்சியுடன் நிரூபிக்கிறது. இந்த நாளை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ போன்ற அதிரடித் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் காதல் ஜோடிகளுக்காக மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிறப்பு இரவு உணவு (Candle Light Dinner) மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்குப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்துள்ளன. தொழில்நுட்பம் வளர்ந்து வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் காதல் பகிரப்பட்டாலும், நேரில் சந்தித்துப் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் அந்தத் தருணமே இன்றும் உன்னதமானது. நாமக்கல் கடைகளில் நிலவும் இந்த விறுவிறுப்பு, அன்பின் வலிமை என்றுமே குறையாது என்பதையே பறைசாற்றுகிறது. - எம்.பிரபாகரன்</p>
<p> </p>
