செங்கொடியின் ஸ்பார்ட்டகஸ் - பெ.சண்முகம்
10 Oct 2026, 10:01 pm

செங்கொடியின் ஸ்பார்ட்டகஸ் - பெ.சண்முகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தின் நாயகர்களில் ஒருவராக விளங்கிய தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் நூற்றாண்டு நிறைவு விழா 2026 அக்டோபர் 13 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 1926ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 27ஆம் தேதி தான் பிறந்ததாக அவரே தெரிவித்துள்ளார்.

விவசாயத் தொழிலாளர்களின் அன்புக்குரியவராகவும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும் விளங்கியவர் தோழர் பி.எஸ்.டி. அவரது பெயரை முன்பே அறிந்திருந்தாலும், அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1981இல்தான் கிடைத்தது. அந்த ஆண்டு திருத்துறைப்பூண்டியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு மாநில மாநாடு நடைபெற்றது. அதில் வாழ்த்துரை வழங்க, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்ற முறையில் நான் சென்றிருந்தேன். அங்குதான் தோழரை முதன்முதலில் சந்தித்தேன். அதன் பிறகு அவர் மறையும் வரை அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்தக் காலத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பண்ணையடிமைகளாக இருந்தவர்களுக்குப் பிறந்த தேதியைக் குறித்து வைக்கவோ, ஜாதகம் எழுதவோ பெரும்பாலும் வாய்ப்பு கிடைத்ததில்லை. பிறப்பைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் அப்போது இல்லை.

தோழர் பி.எஸ்.டி.யிடமிருந்து நேரடியாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், “பண்ணை அடிமைத்தனத்தை ஒழித்த போராட்டத்தில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி” என்ற வாழ்க்கை வரலாற்று நூலைத் தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதினார். 1993இல் சவுத் ஏசியன் புக்ஸ் (பாலாஜி) நிறுவனம் அதை வெளியிட்டது; பின்னர் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. தோழர்கள் அவசியம் படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று நூல்களில் இதுவும் ஒன்று. 1997 ஆகஸ்ட் 19 அன்று தோழர் பி.எஸ்.டி. மறைந்தார்.

சட்டம் ஒழிக்காத அடிமைத்தனம்

அகில இந்திய விவசாயிகள் சங்கம் 1936 ஏப்ரல் 11 அன்று லக்னோவில் தொடங்கப்பட்டது. 90 ஆண்டுகளைக் கடந்து அது கம்பீரமாக வீறுநடை போட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. 1.5 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய விவசாயிகள் அமைப்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம்தான். அதன் அங்கமாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1942இல் தஞ்சை மாவட்டம் தென்பரையில் தொடங்கப்பட்டது. அதன் மாநிலச் செயலாளராகத் தோழர் பி.சீனிவாசராவ் செயல்பட்டபோதுதான் பண்ணையடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

பண்ணையடிமைகளாக இருந்த மக்கள், பண்ணையார் வீட்டு ஆடு, மாடுகளைவிட மோசமாக நடத்தப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, 1843இல், அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்டம் நிறைவேற்றப்பட்டு நூறாண்டுகள் ஆன பிறகும் அடிமைத்தனம் ஒழியவில்லை. பண்ணையார்களைப் பகைத்துக்கொள்ளப் பிரிட்டிஷ் அதிகாரிகள் தயாராக இல்லை.

நாளொன்றுக்கு 16 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கடுமையான உழைப்புச் சுரண்டல். வேலையில் சுணங்கினால் சாட்டையடி, சாணிப்பால் தண்டனைதான். ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவருக்கும் அந்தத் தண்டனை உண்டு. தலைமுறை தலைமுறையாக அனைவரும் பண்ணையடிமைகளாக வேலை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இப்படிச் சாட்டையடி வாங்கிய கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர் தோழர் பி.எஸ்.டி.

முதுகில் எழுதப்பட்ட வரலாறு

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த தோழர் பி.எஸ்.டி., அம்மாநாட்டில் வாழ்த்துரை வழங்க வந்திருந்தார். வாழ்த்துரையின் முத்தாய்ப்பாக, அவர் சட்டையைக் கழற்றித் தன் முதுகில் இருந்த சாட்டையடித் தழும்புகளைக் காட்டினார். இளைஞர்கள் உறைந்துபோயினர்; பிறகு ஆவேசமாக வாழ்த்து முழக்கமிட்டனர். அக்காலத்தில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கானோரின்

தொடர்ச்சி iii ஆம் பக்கம்

முதுகில் இத்தகைய தழும்புகள் இருந்தன. மனிதர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கு இல்லை; உயிரற்ற உடைமைகளைப் போலவே அவர்களும் பண்ணையாருக்கு ஒரு உடைமைதான்.

மின்சாரமாய்ப் பாய்ந்த முழக்கம்

இத்தகைய நிலையில்தான், தோழர் பி.எஸ்.ஆர். கொடுத்த “அடித்தால் திருப்பி அடி” என்ற முழக்கம் மின்சாரம் பாய்ந்ததுபோல் பண்ணையடிமைகளின் உணர்வில் பாய்ந்தது. “ஏண்டி என்று சொன்னால் ஏண்டா என்று கேள்”; “சூரியன் உதித்த பிறகுதான் வயலில் இறங்க வேண்டும்; சூரியன் மறையும்போது கரையேற வேண்டும்”; “கரையேறித்தான் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்”; “உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும்”; “சங்கமாகச் சேருங்கள்; சங்கம் உங்களைக் காப்பாற்றும்; எது வந்தாலும் சங்கம் பாதுகாக்கும்” என்ற உறுதியான வார்த்தைகள் பண்ணையடிமைகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு, மாவட்டம் முழுவதும் பரவின.

அனுபவம் காட்டிய பாதை

தோழர் பி.எஸ்.டி. தனது நேரடி அனுபவத்திலிருந்து விவசாயிகள் சங்கத்துக்கு வந்து சேர்ந்தவர். ஆண்டைகளுக்கு அடிமையாக, படிக்க வாய்ப்பின்றி, முரட்டுத்தனம் கொண்டவராகச் சுற்றிக்கொண்டிருந்தவர் அவர்.

அவர் அரிஜன வாலிபர் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். அந்த அமைப்பு காங்கிரஸ் கட்சியால் வழிநடத்தப்பட்டு வந்தது. ஒருமுறை, பெண் தலைவர் ஒருவர் தலைமையில் குழந்தைகளும் வாலிபர்களும் கொண்ட ஊர்வலம் ஒன்று அக்ரஹாரத்துக்குள் சென்றது. அந்த ஊர்வலத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்ட தனுஷ்கோடி, அக்ரஹாரத் திண்ணையில் உட்காருவதும், ஓடிச்சென்று கதவைத் தொடுவதுமாக இருந்திருக்கிறார். மறுநாள் மீண்டும் அந்தத் தெருவுக்குள் சென்றபோது, அங்கிருந்த பெண்கள் “உன்னைக் கட்டிவைத்து அடிக்கப் போகிறார்கள்; ஓடிவிடு” என்று எச்சரித்திருக்கிறார்கள். “காங்கிரஸ்காரர்கள் அடிக்க மாட்டார்கள்; அவர்கள் காந்தியின் அகிம்சையைக் கடைப்பிடிப்பவர்கள்” என்று கூறிவிட்டுத் தெருவுக்குள் சென்ற அவரைப் பிடித்துக் கட்டிவைத்து வெளுத்துவிட்டார்கள்.

விரக்தியில் திரிந்த அவருக்கு, “பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்று பெரியார் சொன்னது மிகவும் பிடித்துவிட்டது; ஏற்கனவே அடிபட்டவர் அல்லவா? பெரியார் பங்கேற்ற கூட்டத்துக்குச் சென்ற அவர், அம்பேத்கர், பெரியார் பேட்ஜ்களை வாங்கிச் சட்டைப் பையில் குத்திக்கொண்டார். மறுநாள், பெரியார் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நடத்திய டீக்கடைக்குள் சென்று பெஞ்சில் அமர்ந்து டீ கேட்டார். உருவத்தைப் பார்த்தே அவர் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்ட டீக்கடைக்காரரும், கடையில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து அவரைத் தாக்கினர். “நான் பெரியார் கட்சிக்காரன்” என்று அவர் கத்தினார். “பெரியார் கட்சிக்காரன்னா ஊர்ப் பழக்கவழக்கம் மறந்து போயிடுமா?” என்று மீண்டும் தாக்கினர்.

இந்தச் சூழ்நிலையில்தான் பி.எஸ்.ஆரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்தித்து, “எங்கள் கிராமத்தில் சங்கம் அமைக்க வர வேண்டும்” என்று அழைத்தார்; தானும் சங்கத்தில் சேர்ந்தார். பிறகு சங்கம் அமைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

செங்கொடியின் ஸ்பார்ட்டகஸ்

ரோமாபுரிச் சாம்ராஜ்யத்தில் அடிமைகளாக இருந்த தன் மக்களை விடுவிக்க, அவர்களை அணிதிரட்டித் தன்னையே பலிகொடுத்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ். மனிதகுல வரலாற்றில் ஸ்பார்ட்டகசுக்குத் தனி இடமுண்டு. படிக்க வாய்ப்புக் கிடைக்காத பண்ணையடிமைகளாக இருந்த தன் மக்களை விடுவிக்கத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட மாவீரர் தோழர் பி.எஸ்.டி. அதுபோல் செங்கொடி இயக்க வரலாற்றில் அவருக்கும் தனி இடமுண்டு.

1967இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் திருவாரூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியப் பெருந்தலைவராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். இப்படிப் பல பதவிகளை வகித்தவர் தோழர் பி.எஸ்.டி. 9 ஆண்டு 9 மாதச் சிறை வாழ்க்கை, ஓராண்டுத் தலைமறைவு வாழ்க்கை என்று தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.

சாதியை எதிர்த்து நின்ற முன்மாதிரி

பொருளாதார விடுதலைக்கான போராட்டத்தையும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்து நடத்தியதுதான் தோழர் பி.எஸ்.ஆரின் குறிப்பிடத்தக்க பணி. இந்தப் போராட்டத்தில், பட்டியல் சாதியினர் அல்லாத, உயர்சாதி என்று சொல்லப்படும் சாதிகளில் பிறந்த பல தலைவர்கள், தாம் பிறந்த சாதியையே எதிர்த்துக் களம் கண்டனர். மணலி கந்தசாமி, ஜீவா, அமிர்தலிங்கம், என்.வெங்கடாசலம், கோ.வீரய்யன் என அந்தப் பட்டியல் மிக நீளமானது. இந்த முன்மாதிரி இன்றும் பின்பற்றப்பட வேண்டும்.

இன்னும் முடியாத போராட்டம்: உழுபவருக்கே நிலம்

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ ஆக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு முக்கிய நோக்கம். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அத்தகைய கருத்துகள் வலியுறுத்தப்பட்டு, விடுதலை போராட்டக் களத்தில் ‘உழுபவருக்கே நிலம் சொந்தம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நிலச் சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் போராட்டங்களை நடத்தின.

இதன் விளைவாக, 1961இல் நில உச்சவரம்புச் சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பம் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரை வைத்துக்கொள்ளலாம். இதோடு பல விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டதால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மட்டுமே உபரியாகக் கிடைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை வடிவமைத்த பேராசிரியர் மகலநோபிஸ், நாடு முழுவதும் 6 கோடி ஏக்கர் உபரியாகக் கிடைக்கும் என்று மதிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு கலைஞர் ஆட்சியில் 1971, 1972, 1973 ஆண்டுகளில் நில உச்சவரம்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் மட்டுமே உபரி என்று கண்டறியப்பட்டது. 2011 வரை 2 லட்சம் ஏக்கர்தான் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ், திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் ‘நில மறுவிநியோகம்’ குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடைபெறவில்லை. எனவே, நிலமற்றவர்களுக்கு நிலம் கோரி வலுமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

தியாகிகள் மட்டுமல்ல; தோழர் பி.எஸ்.டி.யைப் போல மக்களுக்காகப் பாடுபட்டு மறைந்தவர்களும் போற்றுதலுக்குரியவர்களே. தோழர் பி.எஸ்.டி.யின் வாழ்க்கையைக் கற்போம்; அவரைப் போல மக்கள் விடுதலைக்காகப் பாடுபட உறுதியேற்போம்.