அன்புமணி மீதான சிபிஐ விசாரணையை உடனே தொடங்க வேண்டும்
22 Dec 2025, 2:53 pm
<p><strong>அன்புமணி மீதான சிபிஐ விசாரணையை உடனே தொடங்க வேண்டும் </strong></p>
<p>பென்னாகரம், டிச. 22- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில், காவிரி உபரிநீர் திட்டம், தொழிற்பேட்டை அமைத்தல் மற்றும் வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை ‘மக்கள் கோரிக்கை மாநாடு’ எழுச்சியுடன் நடைபெற்றது. மனைப்பட்டா மற்றும் காவிரி உபரிநீர் திட்டம் மாநாட்டில் சிறப்புரையாற்றிய கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழகம் முழுவதும் மனைப்பட்டா கேட்டு சிபிஎம் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களை விளக்கினார். “நீர்நிலை ஆவணங்களில் உள்ள குடியிருப்புகளுக்குப் பட்டா வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்; ஆனால் அரசு அலுவலகங்களும் பேருந்து நிலையங்களும் அதே ஏரிப் புறம்போக்குகளில் தான் இயங்குகின்றன. இது குறித்து முதலமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தியதன் பேரில், தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆட்சேபணை இல்லாத நிலங்களுக்குப் பட்டா வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவான காவிரி உபரிநீர் திட்டத்தை ஒன்றிய அரசின் நிதி பெற்று மாநில அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் மற்றும் மத அரசியல் குறித்த விமர்சனம் தேர்தல் ஆணையம் ‘தீவிர வாக்காளர் திருத்தம்’ என்ற பெயரில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை நீக்கும் பணியைச் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் மட்டும் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் ஜனவரி 9-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான சர்ச்சையில், சிக்கந்தர் தர்காவில் தீபம் ஏற்ற அனுமதித்த தீர்ப்பைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாகச் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் பூர்ணசந்திரன் என்பவர் தற்கொலை செய்துகொண்டது வருந்தத்தக்கது என்றும், இவர்களின் மத அரசியல் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது என்றும் தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் சிபிஐ விசாரணை ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர் நலச் சட்டங்களைச் சிதைத்து 4 தொகுப்புகளாக மாற்றியுள்ளதோடு, மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி அதனை முடக்கப் பார்க்கிறது. இதற்கு எதிராக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார். தருமபுரி மாவட்ட அரசியல் பற்றிப் பேசிய பெ. சண்முகம், “பாமக இந்த மாவட்டத்தைத் தனது குடும்பச் சொத்தாகக் கருதுகிறது. அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்திற்குச் சரியாகச் செல்வதில்லை; மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதுமில்லை. தற்போது குடும்பச் சண்டையின் காரணமாக அன்புமணி மீதான சிபிஐ வழக்கை விசாரிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸே கோரிக்கை விடுத்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது; சிபிஐ உடனடியாக இந்த விசாரணையைத் தொடங்க வேண்டும்,” என்றார். இடதுசாரி மாடலே தீர்வு மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணன் பேசுகையில், கடும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இடதுசாரி பொருளாதாரக் கொள்கைகளே தீர்வு என்றார். தமிழக அரசுத் துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் உருவான ரேஷன் கடை முறை மற்றும் வியட்நாம், கேரளா ஆகிய மாநிலங்களின் மக்கள் நலச் செயல்பாடுகளை முன்னுதாரணமாகக் காட்டினார். மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ. ஜீவானந்தம் அனைவரையும் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். இறுதியில் மாநாட்டின் நோக்கங்கள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என உறுதி ஏற்கப்பட்டது.</p>
