ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: மின்வாரிய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு
31 May 2026, 9:40 pm

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: மின்வாரிய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை, மே 31 - தமிழக மின் வாரியத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (2021-2023) மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில் சுமார் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரிகள் மீது சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் விநியோகத்திற்காக சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

டெண்டர் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ என்ற சமூக நல அமைப்பு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியது.

டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு விலையை நிர்ணயம் செய்தனர் என்றும், சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு கொள்முதல் செய்ததால் ரூ.397 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும் அதுவும் நிராகரிக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்கு பச்சைக் கொடி கிடைத்தது.

இதனையடுத்து சிபிஐ கூட்டுச் சதி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.