வறண்ட காவிரி : துயரத்தின் பிடியில் டெல்டா மாவட்டங்கள்! - எஸ். துரைராஜ்
13 Jul 2026, 9:13 pm

வறண்ட காவிரி : துயரத்தின் பிடியில் டெல்டா மாவட்டங்கள்! - எஸ். துரைராஜ்

காவிரியில் தண்ணீர் திறக்கப் படாததாலும், எதிர்பார்த்த அளவிற்குத் தென்மேற்குப் பருவமழை பெய்யாததாலும் “தமிழகத்தின் நெற்களஞ்சியம்” என்று போற்றப்படும் டெல்டா மாவட்டங்கள் பெரும் துயரத்தை சந்திக்க உள்ளன. பலவீனமான பருவ மழையாலும், காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையில் கர்நாடக மாநிலத்துட னான தீராத சிக்கல்களாலும் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த துயரத்தில் சிக்கியுள்ளனர்.

குறுவை சாகுபடி பாதிப்பும் எல் நினோ அச்சமும்

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை யில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத தால், பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள னர். ‘எல் நினோ’ போன்ற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களால் சம்பா பயிரையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் விவ சாயிகள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தவண்ணம் உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும் காவிரி நீர் தீர்ப்பாயத்தின்படியும் ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 9.19 டி.எம்.சி-க்கு பதிலாக, 2.915 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.

சுருங்கும் விவசாயப் பரப்பு

கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு குறுவைக்கான சிறப்புத் திட்டத்தை அறிவித்து, 3.55 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என்று தெரி வித்தது. ஆனால், தஞ்சை மற்றும் திரு வாரூர் மாவட்ட விவசாயிகள் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி சாத்தியமாகும் என்று கூறுகின்றனர். ஆறுகளாலும் பாசன வாய்க்கால்கள் மூலமாகவும் பாசன வசதி பெற்று வந்த நிலங்கள் டெல்டா மாவட்டங்களில் தரிசாகக் கிடக்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1.94 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது; ஆனால், இந்த ஆண்டு வெறும் 89,000 ஏக்கர் நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1.91 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப் பட்டது; இந்த ஆண்டு 64,000 ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை பயிர் செய்து வரும் விவசாயிகள், தேவை யான அளவிற்குத் தடையற்ற மும்மு னை மின்சாரம் கிடைப்பது இல்லை எனப் புகார் கூறுகின்றனர். கடுமையான வெப்பத்தின் காரணமாகப் பயிர்கள் வாடி வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகத் தாழ்ந்து வருகிறது.

கிராமப்புறப் பொருளாதாரச் சரிவு

ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்பில் ஏக்கருக்கு ரூ.1500 வீதம் செலவு செய்து கோடை உழவு செய்த விவசாயிகள், தண்ணீர் வராததால் விரக்தி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடி செய்ய முடியாமல் நிலங்கள் தரிசாகக் கிடப்பதால், வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறப் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பம்ப் செட் வசதிகள் இல்லாததால் விவசாயிகளும் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

93.47 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டிய மேட்டூர் அணையில் தற்சமயம் 38 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. கர்நாடக அரசிடமிருந்து வர வேண்டிய தண்ணீரைத் தமிழ்நாடு அரசு கேட்டுப் பெறுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மையால், குறுவை மட்டுமல்லாமல் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றார்கள்!