காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்யும் கும்பல்: ஆறு மாசடைவதாக பொதுமக்கள் புகார்
2 Nov 2026, 12:33 am

காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்யும் கும்பல்: ஆறு மாசடைவதாக பொதுமக்கள் புகார்

நாமக்கல், நவ.1-காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சாயத் துணிகளை சுத்தம் செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஏராளமான சாயத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய கழிவுநீரை சுத்திகரிக்காமல்வெளியேற்றியதால், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக சில சாயத் தொழிற்சாலைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. காவிரி ஆற்றில் சாயக் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் சாயப்பட்டறை உரிமையாளர்கள், இரவு நேரங்களில் பள்ளிபாளையம் அருகே உள்ள சொக்கராயன்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் அச்சிடப்பட்ட சாயத்துணிகளை தண்ணீரில் சுத்தம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவிரி ஆறு மாசடைவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்நிலையில், சனியன்று இரவு காவிரி ஆற்றில் சாயத்துணிகளை அலசிய நபர்கள் தொடர்பான காணொளியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.