கல்வி வளாகத்தை சாதிமயமாக்கும் சாதி அடையாள அட்டை - அமைச்சர் அறிவிப்பிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!
9 hours before

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பிற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"சாதிய பாகுபாடுகள் அற்ற சமத்துவ எண்ணம் கொண்ட வகுப்பறைகள், கல்வி வளாகங்கள் அமைய வேண்டும் என்ற இலக்கு நோக்கிப் பயணிக்க வேண்டிய தருணத்தில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இது சமூகநீதி கூருணர்வற்றது. என்பதோடு தமிழ்நாட்டின் கல்வி வளாகங்களைப் பற்றி எவ்வித புரிதலும், அக்கறையும் இன்றி வெளியிடப்பட்டது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வி வளாகங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு தீண்டாமை ஒழிப்பு "பள்ளிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகள்" குறித்து 441 பள்ளிகளில் 644 மாணவர்களிடம் மேற்கொண்ட கள ஆய்வே சான்றாக உள்ளது. அந்த கள ஆய்வின் விபரப்படி சாதியை அடையாளப்படுத்தும் நிறங்களில் கயிறு, டாலர், செயின், கடுக்கன், பொட்டு, தொப்பி அணிந்து பள்ளிக்கு வருதல், சாதித் தலைவர்களின் படங்களை பேருந்து பாஸ் மற்றும் புத்தகங்களில் வைத்திருத்தல், சாதி அடையாளங்கள் கொண்ட டி-ஷர்ட், பனியன் அணிதல், சைக்கிள்களில் சாதி ஸ்டிக்கர் ஒட்டுதல், சாதி நிறம் பூசுதல் என்று வகை வகையாக மாணவர்கள் தங்களது சாதிகளை வெளிப்படுத்தும் விரும்பத்தகாத சூழ்நிலைகளே உள்ளன. இதனை களைந்திட வேண்டும் என்று ஆய்வின் பரிந்துரையாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழங்கியது. மேலும் ஆய்வின் அனைத்து விபரங்களையும் பள்ளிக்கல்வித் துறைக்கும். கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட மேனாள் நீதிபதி கே.சந்துரு ஆணையத்திற்கும் வழங்கியது.

இந்நிலையில் தான் 2024-2025 கல்வி ஆண்டிலிருந்து வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியது. கல்வி வளாகங்கள் சமத்துவத்தின் சின்னங்களாக பரிணமிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்பது இன்றைய தேவை மட்டுமல்ல அதுவே எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் அமைந்திடும்.

இத்தருணத்தில் ஒரு மூத்த அமைச்சரின் இந்த அறிவிப்பு கல்வி வளாகங்களை சாதி மயமாக்கிவிடும். மாணவர்களை சாதி அடிப்படையில் பிரிக்கும் பௌதீக அடையாளமாக இந்த அட்டைகள் காட்சியளிக்கும். இந்த ஆபத்தான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.