மதுரை முக்கிய செய்திகள்
20 Feb 2026, 2:39 pm

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு பதிவு

தேனி, பிப். 20- ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.21.31 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீலை யம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சித்தார்த்தன், ரமணன். இவர்களிடம் சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ஆறு முகம் மகன் அரவிந்த், ஜெயராம் மகன் யுவராஜ் ஆகியோர் அறிமுகமாகி, தாங்கள் சென்னையில் ரயில்வே துறையில் வேலை செய்து வருவதாகவும், சித்தார்த்தன், ரமணன் ஆகியோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் 2022, ஜனவரி 6ஆம் தேதி சித்தார்த்தன், ரமணன் ஆகியோரிடம் சீலையம்பட்டியில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுக் கொண்டதாக கூறப் படுகிறது. இந்த நிலையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோர் தங்களுக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா விடம் சித்தார்த்தன் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வேன் மோதி பேக்கரி தொழிலாளி பலி

தேனி, பிப். 20- ஆண்டிபட்டி அருகே வேன் மோதிய விபத்தில் பேக்கரி தொழிலாளி பலியானார். தேனி மாவட்டம், க.விலக்கு அருகே உள்ள முத்தனம் பட்டியைச் சேர்ந்தவர் பேக்கரி தொழிலாளி சிவராஜா(41). இவர், தனது மனைவியுடன் முத்தனம்பட்டியிலிருந்து க.விலக்கு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, க.விலக்கு-தேனி சாலை சந்திப்பு பகுதியில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்தக் காயமடைந்த சிவராஜா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேன் ஓட்டுநர் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்ஜித்குமார் என்பவர் மீது க.விலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

இராமநாதபுரம், பிப்.20- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நீலகண்ட காலனியைச் சேர்ந்த நாகசாமி மகன் பிரகாஷ் ராஜ்(32). இவர், கடந்த 2020 இல் 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இராமேஸ்வரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, பிரகாஷ் ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா, வியாழக்கிழமை அன்று பிரகாஷ் ராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.