புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித் தருக! சேவை மைய கட்டிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித் தருக! சேவை மைய கட்டிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்</strong></p>
<p>அரியலூர், பிப்.9- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பந்தல் ஊராட்சியில் 5, 6 ஆவது வார்டுகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 6 ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அந்த நீர்த்தேக்க தொட்டியானது மிகவும் பழமையாகவும், சிதலமடைந்த நிலையிலும் உள்ளது. இதனால், சுத்தம் செய்ய முடியாத சூழல் உள்ளதாலும், கசடுகள், துரு உள்ளிட்டவை கலந்து வருவதால் அந்த குடிநீரை பருகும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பொதுமக்களின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு அரசு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டுவதற்கு அரசாணை வழங்கியுள்ளதாகவும், ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சில நபர்கள் இதனை ஒரு பிரச்சனையாகக் கொண்டு வந்து விட்டதாகவும், இதனால் ஒரு கிராமத்தில் வசிக்கக்கூடிய இரண்டு பகுதி மக்கள் பாதிப்படக்கூடிய சூழல் அதிகரித்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 5 ஆவது மற்றும் 6 ஆவது வார்டுகளைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். மேலும் இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “தனி நபரின் தலையீட்டால் பணி நடைபெறாமலும், பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்படாமல் உள்ளதால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது’’ எனத் தெரிவிக்கின்றனர். எனவே அரசு உடனடியாக தலையிட்டு பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை இடித்து அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கலைந்து சென்றனர்.</p>
