ஸ்கேன் இந்தியா
30 Oct 2026, 9:27 pm

ஸ்கேன் இந்தியா

மீண்டும்

மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங், மீண்டும் கட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் சிங், பாஜகவின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தனக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்த நிலையில், தன்னுடைய இளைய மகனைத் தேர்தலில் நிறுத்தினார். தற்போது மீண்டும் கட்சிப் பொறுப்பு வழியாகத் தீவிர அரசியலுக்குள் வர முயற்சிக்கிறார். இப்படி இவரை மீண்டும் முன்னிறுத்தினால், எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று பாஜக இரண்டாம் மட்டத் தலைவர்கள் மத்தியில் முணுமுணுப்பு இருக்கிறது. பணம் மற்றும் ஆள்பலத்திற்கு பிரிஜ் பூஷன் அவசியம் என்று அவருக்கு ஆதரவான தரப்பு கூறுகிறது.

குழப்பம்

நவ. 2 முதல் 4 ஆம் தேதி வரையில் ஆர்எஸ்எஸ் உயர்மட்டக்குழு கூடுகிறது. வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்திற்குப் பின்னால், அந்நியக் கைவரிசை உள்ளது என்று விஜயதசமி அன்று பேசியபோது தலைவர் மோகன் பகவத் கூறினார். சில தலைவர்களோ, இளைஞர்களின் கோபத்தை பகவத் அங்கீகரிக்கிறார் என்றனர். இதில் எது சரி என்ற கேள்வி ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இதற்குத் தெளிவு கிடைக்கலாம். அமைப்பே இல்லாமல் இவ்வளவு கூட்டத்தை எப்படி இளைஞர்களால் திரட்ட முடிகிறது என்ற கேள்வியை விவாதிக்கப் போகிறோம் என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளில் ஒருவர் கூறியிருக்கிறார். நிச்சயமாக, உத்தரப்பிரதேசத் தேர்தல் பற்றிப் பேசுவோம் என்கிறார் அவர்.

கடத்தல்

நிறுவனங்களுக்கான தேசியச் சட்டத் தீர்ப்பாயத்திற்கான பணியாளர் நியமனங்களை, பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் ‘கடத்திச் சென்று விட்டது’ என்று உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. நியமனங்கள்குறித்துக் கருத்துத் தெரிவித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, தற்காலிகத் தீர்வாகப் பிறதுறைகளில் இருந்து ஊழியர்களை அமர்த்துவது, அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு ஊழியர் தேர்வாணையம்மூலமாக நிரந்தரப் பணியாளர்களை எடுப்பது என்பதுதான் தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டது. ஒப்பந்தப்பணியாளர்களின் பணி ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்ற அடிப்படையில் போடப்பட்ட வழக்குவிசாரணையில்தான் இந்தக் கருத்து வந்தது. ஒரு தனியார் நிறுவனமே தற்போது பணியாளர்களை ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்கிறது என்பதையும் விமர்சித்திருக்கிறார்கள்.

ரத்து

விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் அக்டோபர் 31 அன்று ஓய்வு பெறுகிறார். இவருக்கு வழியனுப்பு விழா நிகழ்வுகளில் ஒன்றாக தில்லி ரேஸ் கோர்சில் உள்ள விமானப்படை கோல்ப் மைதானத்தில் ஒரு போட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானப்படைத் தளபதிகள் ஓய்வு பெறுகையில் இத்தகைய விளையாட்டுப் போட்டியை கோல்ப் தங்கள் மைதானத்தில் விமானப்படை நடத்துவது வழக்கம். சமீப காலமாகத் தில்லியின் மையப்பகுதியில் உள்ள இடங்களை ஒன்றிய அரசின் நில மேம்பாட்டுத்துறை எடுத்து வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தும் நிலங்களின் பட்டியலில் இந்த கோல்ப் மைதானமும் உண்டு. ஆனால் இன்னும் விமானப்படை அதை ஒப்படைக்கவில்லை. திடீரென்று அக்.29 அன்று காலை 5 மணி முதல் யாருக்கும் நுழைய அனுமதியில்லை என்று ஒன்றிய அரசு சார்பில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆணையிட்டு விட்டனர். இதனால் தளபதியின் வழியனுப்பு நிகழ்வுகளில் ஒன்று ரத்தாகிறது.