வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி பிகேடி டயர்ஸ் ஆலை தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்
31 May 2026, 8:30 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி பிகேடி டயர்ஸ் ஆலை தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்

“12 மணி நேர உழைப்புச் சுரண்டல்; உறைந்து கிடக்கும் ஊதியம்”

வேலைநிறுத்தம் 44

வாடி, மே 31- உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் கோல்டி மசாலா ஆலை தொழி லாளர்களின் தீரமிக்க போராட்டத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதியும், பெரும் தொழில்துறை மண்டலமுமான பிவாடியில் (Bhiwadi) தொழிலாளர்களின் மற்று மொரு போர்க்குணமிக்க எழுச்சி வெடுத்துள்ளது. சர்வதேச அளவில் ‘ஆஃப்-ஹைவே டயர்’ உற்பத்தியில் முன்னணி இடத்தைக் கொண்டு ள்ள பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் (BKT) நிறுவனத்தின் ஆலை வாயி லில், நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் தங்களின் அடிப்படை உரிமை களுக்காகவும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் மாபெரும் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

பிகேடி டயர்ஸ் ஆலையின் பிவாடி மற்றும் சோபங்கி ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 1,600 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களுடன் இணைந்து ஆலையின் தொழில்நுட்ப ஊழியர்களும் தங்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய 8 மணி நேர வேலைமுறை, கூடுதல் நேரப் பணிக்கான இரட்டிப்பு ஊதியம் மற்றும் முறையான பணிச்சூழ லைக் கோரி ஆலை வாயிலை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் குதித்ததால் டயர் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

நெடுஞ்சாலை முற்றுகையும் காவல் துறையின் தடியடியும்

உள்ளூர் இந்தி ஊடகங்கள் மற்றும் என்டிடிவி ராஜஸ்தான் ஊடகத்தின் கள அறிக்கைகளின்படி, ஏப்ரல் 13 அன்று அண்டை உற்பத்தி நிறுவனமான சுப்ராஜித் இன்ஜினியரிங் ஆலையில் தொடங்கிய தொழிலாளர் அதிருப்தி, ஏப்ரல் 16 அன்று பிகேடி டயர்ஸ் ஆலையிலும் வர்க்கக் கொந்தளிப்பாக மாறியது. தொழிலாளர்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சிய ஆலை நிர்வாகம், அவர்கள் ஆலை வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க இரும்புத் தடுப்புகளை அமைத்துப் பூட்டியது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், பிவாடி மற்றும் சோபங்கி தொழில் வழித்தடச் சாலைகளில் திரண்டு மாபெரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிகேடி டயர்ஸ் தொழிலாளர்களின் இப்போராட்டம், அருகில் உள்ள ரிலாக்சோ காலணி ஆலை மற்றும் நிப்பான் ஆலைத் தொழிலாளர்களிடமும் பரவி, ஒட்டுமொத்த தொழிற்பேட்டை யையும் ஸ்தம்பிக்க வைத்தது. தொழி லாளர்களின் இந்த வர்க்க ஒருமைப்பாடு அண்டை ஆலைகளுக்கும் பரவுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பெரும் காவல் படையைக் குவித்தது. ஆஜ் தக் ஊட கத்தின் செய்திகளின்படி, நெடுஞ்சாலைப் போக்குவரத்தைச் சீர்செய்வதாகக் கூறி காவல் துறையினர் தொழிலாளர்கள் மீது கடுமையான தடியடி நடத்தினர். எனினும், தொழிலாளர்கள் பின்வாங்காமல் தங்களின் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தொழிலாளர்களின் குமுறல்களும் சுரண்டலின் பின்னணியும்

ஆலையின் உள்ளே நிலவும் கடுமையான பணிநெருக்குதல்கள் குறித்துப் போராட்டத்தில் பங்கேற்ற தொழி லாளரான அபிமன்யு சிங் ஊடகங்களிடம் தங்களின் ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“நாங்கள் மாதத்திற்கு 17,000 முதல் 21,000 ரூபாய் வரை ஊதியம் பெறுவதாக வெளியில் தெரிந்தாலும், அது 8 மணி நேரத்திற்கான ஊதியம் அல்ல. எங்களை 12 மணி நேரம் வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். அத்துடன், இந்த மொத்தத் தொகையி லிருந்து பிஎப், இஎஸ்ஐ மற்றும் ஒப்பந்த தாரர்களின் கமிஷன் போக மிகக் குறைந்த தொகையே கைக்குக் கிடைக் கிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏற்றத்திற்கு மத்தியில், இந்தச் சொற்பக் கூலியை வைத்துக் கொண்டு எங்களால் எங்களின் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை” என்று தொழிலாளர்கள் குமுறினர்.

டயர் உற்பத்தி என்பது கடுமை யான உடல் உழைப்பும், அதிக வெப்பமும் கொண்ட அபாயகரமான பணிச்சூழ லாகும். அண்டை ஆலைகளில் உள்ள இலகுவான வேலைகளுக்கு இணை யாகவே பிகேடி ஆலை நிர்வாகமும் ஊதியம் வழங்கி வந்தது தொழிலாளர் கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்ப டுத்தியிருந்தது.

மேலும், தொழிலாளர் களுக்கு முறையான பேருந்து போக்கு வரத்து வசதியோ, சிற்றுண்டிச் சாலை வசதியோ அல்லது மாதாந்திர ஊதியச் சீட்டோ கூட வழங்கப்படாமல் நிர்வாகம் உழைப்பை உறிஞ்சி வந்தது இப்போரா ட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முத்தரப்பு உடன்பாடும் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளும்

தொழிலாளர்களின் இந்தத் தளர்வற்ற போராட்டத்தையும், அதன் விளைவாக ஏற்பட்ட உற்பத்தி முடக்கத்தையும் தொடர்ந்து, பிராந்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலை நிர்வாகப் பிரதிநிதிகளுக்கும், தொழிலாளர்களின் குழுவிற்கும் இடையே அவசர முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள் பின்வருமாறு:

• அண்டை மாநிலமான ஹரியானா வின் தொழில்துறை மண்டலங்களில் ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்துத் தொழிலாளர் களுக்கும் உடனடியாக மாதத்திற்கு 3,000 முதல் 3,500 ரூபாய் வரை அடுக்கு வாரியான ஊதிய உயர்வு வழங்கப்படும்.

• தொழிலாளர்கள் அனைவரும் சட்டப்பூர்வமான 8 மணி நேர வேலை முறைக்கு உட்படுத்தப்படுவர். கட்டாய இரட்டை ஷிப்ட் முறைகள் உடனடியாக நிறுத்தப்படும். 8 மணி நேரத்திற்கு மேல் பார்க்கப்படும் கூடுதல் நேர வேலைக்குச் சட்டப்படியான இரட்டை வீத கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும்

• ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியம், பிஎப், இஎஸ்ஐ மற்றும் கூடுதல் நேர வேலை விவ ரங்கள் அடங்கிய மாதாந்திர ஊதியச் சீட்டு முறையாக வழங்கப்படும்.

• அமைதியான முறையில் ஆலை வாயில் போராட்டங்களில் பங்கேற்ற நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் எவரையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்யவோ அல்லது அவர்கள் மீது காவல் துறையில் வழக்குப் பதியவோ கூடாது என எழுத்து ப்பூர்வமாக உடன்பாடு எட்டப்பட்டது.

கூட்டுப் போராட்டத்தின் வெற்றியும் வர்க்க விழிப்புணர்வும்

இப்போராட்டம் சிஐடியு மற்றும் பிஎம்எஸ் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் முழுமையான ஆதரவோடும், வழிகாட்டுதலோடும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் தொழிலாளர்க ளின் தன்னிச்சையான எழுச்சியாகத் தொடங்கினாலும், தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டப் பாதுகாப்பு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தொழிலாளர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர்.

தில்லி தேசியத் தலைநகர் பிராந்தி யத்தை ஒட்டியுள்ள வடஇந்தியத் தொழிற்பேட்டைகளில் நிலவி வரும் கடுமையான பணவீக்கம், ஒப்பந்த உழைப்புச் சுரண்டல் மற்றும் மனிதநேய மற்ற நீண்ட பணி நேரங்களுக்கு எதி ராகத் தொழிலாளர் வர்க்கம் தங்களின் உரிமைகளுக்காகத் தன்னிச்சை யாகவும், திட்டமிட்ட ரீதியிலும் அணி திரண்டு வருவதையே பிவாடி பிகேடி டயர்ஸ் ஆலை வேலைநிறுத்த வெற்றி காட்டுகிறது. தி லெப்ட் வியூஸ்