பாஜகவின் தேர்தல் கால முதலீடு!
2 Apr 2026, 5:30 am

பாஜகவின் தேர்தல் கால முதலீடு!

தமிழகத் தேர்தல் களத்தில் ஊழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துகள், கண்ணாடி முன் நின்றுகொண்டு கண்ணாடியைக் குறை சொல்வது போல் இருக்கின்றன. எந்தவொரு ஆதாரமும் இன்றி அவதூறுகளை அள்ளி வீசுவது, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் ஒரு மலிவான ‘தேர்தல் கால முதலீடு’ என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

கொரோனா காலத்தில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட ‘பிஎம் கேர்ஸ்’ நிதி ஏன் கணக்குகளை நாடாளுமன்றத்தில் கேட்க அனுமதி மறுக்கப்படுகிறது ஏன்? அரசு இணைய தளங்களைப் பயன்படுத்தி, பாஜகவின் வங்கிச் சங்கிலிகளோடு தொடர்புடைய கணக்குகளுக்கு நிதியை மடைமாற்றியது யார்? ஒரு தனி யார் அறக்கட்டளைக்கு அரசு அதிகாரிகளையும், அரசு முத்திரையையும் பயன்படுத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது?

இதே நிதியில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் ரூ. 2000 கோடி நிதி அளித்திருக்கின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாக நிதி பிடித்தம் செய்யப்பட்டது. இது ஊழல் இல்லையா? இதை யார் விசாரிப்பது? இதுவே இந்தியாவின் மிகப்பெரிய நிர்வாக முறைகேடு என்பதற்குப் போதுமான சான்றாகும். ஊழல் பற்றிப் பேச பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசும் பியூஷ் கோயல், முதலில் தன் சொந்தக் கட்சியைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்திய அளவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மக்கள் பிரதிநிதிகளில் பாஜகவினரே முதலிடத்தில் இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனைகள், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி வீதியில் அமர்ந்து போராடியபோது, மத்திய அமைச்சரவை அவருக்குக் கவசமாக நின்றதே தவிர, பெண்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள், பாஜக ஆளும் மாநிலங்களே குற்றங்களின் தலைநகரமாக விளங்குவதைப் பறைசாற்றுகின்றன. காவல் மரணங்களில் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ‘டபுள் எஞ்சின்’ சர்க்கார் ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்ற மாநிலங்களைவிட ஏன் அதிகமாக இருக்கின்றன?

பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்திலேயே நின்றுகொண்டு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றிப் பேசுவது பியூஷ் கோயலின் அரசியல் அறியாமையையே காட்டுகிறது. தமிழக மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்; அவர்களின் தீர்ப்பு உண்மையை உரக்கச் சொல்லும்!