`அதிமுக எனும் கட்சியையே விழுங்கப் பார்க்கிறது பாஜக’
5 Apr 2026, 5:18 pm
<p><strong>`அதிமுக எனும் கட்சியையே விழுங்கப் பார்க்கிறது பாஜக’ </strong></p>
<p>அரியலூர், ஏப். 5: “பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களைப் போலக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியைப் பறிப்பது மட்டுமல்ல, தமிழகத்தில் அதிமுக எனும் கட்சியையே முழுமையாக விழுங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது” எனப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் சாடினார். அரியலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் லதா பாலுவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அரியலூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசினார். பாஜகவின் பின்வாசல் அரசியல் “இந்தத் தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான அதிகாரப் போராட்டம். பல்வேறு மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பீகாரில் நிதிஷ்குமாரை முன்னிறுத்தித் தேர்தல் நடத்திய மோடி, அடுத்த ஆறே மாதங்களில் அவரது பதவியைப் பறிக்கும் நிலையை உருவாக்கியுள்ளார். மகாராஷ்டி ராவிலும் ஏக்நாத் ஷிண்டேவைப் பயன்படுத்தி சிவசேனா ஆட்சியைச் சிதைத்துவிட்டு, தற்போது அங்கேயும் பாஜக தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளது. நிதிஷ்குமார், ஷிண்டே ஆகியோருக்கு ஆட்சி மட்டுமே போனது; ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியையே பாஜகவிடம் அடகு வைத்துக்கொண்டிருக்கிறார்” என்றார் அமைச்சர். அதிமுகவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை கூட்டணி என்ற பெயரில் அதிமுகவை பாஜக குழிதோண்டிப் புதைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து எச்சரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், “தன் மீதான வழக்குகளுக்குப் பயந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை மோடியோ, அமித்ஷாவோ தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கவில்லை. மாறாக ‘என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி’ என்றுதான் சொல்கிறார்கள். இதிலிருந்தே அதிமுகவை முழுமையாக விழுங்கத் துடிக்கும் அவர்களின் பாசிச மனநிலை புரிகிறது” எனக் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி. துரைசாமி, அ. அருண்பாண்டியன், எஸ். மலர்கொடி, தேமுதிக இராமஜெயவேல், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாரியம்மா, விசிக அங்கனூர் சிவா, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோபால், மதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பா, சிபிஐ மாவட்டச் செயலாளர் நடராஜ் மற்றும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். (ந.நி)</p>
