ஒரே கடிதத்தில் கிழிந்து தொங்கும் பாஜகவின் முகத்திரை!
25 Mar 2026, 5:29 pm
<p><strong>ஒரே கடிதத்தில் கிழிந்து தொங்கும் பாஜகவின் முகத்திரை!</strong></p>
<p>“பெண்களுக்கு அதிகாரம்”, “பெண் சக்தி (நாரி சக்தி)”, “மகளிர் இடஒதுக்கீடு” எனத் தேசம் முழுவதும் முழக்கமிட்டு வரும் பாரதிய ஜனதா கட்சியின் முகத்திரை, தமிழகத்தில் அதன் சொந்தக் கட்சி நிர்வாகி ஒருவரின் புகார் கடிதத்தால் கிழிந்து தொங்குகிறது. தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு. நாகராஜன் மீது, மாவட்ட மகளிரணித் தலைவர் ஒருவர் சுமத்தியுள்ள “பாலியல் வன்கொடுமை முயற்சி” மற்றும் “மிரட்டல்” புகார்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தை ஒரு பெண்ணின் தனிப்பட்ட புகாராக மட்டும் பார்க்க முடியாது; இது ஒரு கட்சியின் கலாச்சாரம் மற்றும் பெண்களை அவர்கள் நடத்தும் விதம் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. அதிகாரத்தின் பெயரால் அச்சுறுத்தல் பாதிக்கப்பட்ட நிர்வாகி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் ரத்தத்தை உறைய வைக்கின்றன. “கட்சி வேலை” என்று கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து, ஓட்டுநரை வெளியே அனுப்பிவிட்டு, காரின் உள்ளேயே அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “எனக்கு இணக்கமாக இருந்தால் உன்னை மகாராணி போல் வைத்திருக்க முடியும்” என்ற கரு. நாகராஜனின் வார்த்தைகள், அக்கட்சியில் பதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா அல்லது சமரசங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ‘ஜி’ கலாச்சாரம் - சனாதன அடிமைத்தனமா? கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் ‘அண்ணா’ என்று அழைக்கக் கூடாது, ‘ஜி’ அல்லது ‘சார்’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று கரு. நாகராஜன் கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சாதாரண விவகாரமல்ல. உறவுமுறைப் பெயர்களைத் தவிர்த்து, அதிகார வர்க்கப் பெயர்களைத் திணிப்பது என்பது பெண்களை ஒரு படி கீழே வைத்துப் பார்க்கும் ‘சனாதன’ மனநிலையின் வெளிப்பாடே ஆகும். பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களே இப்படிச் செயல்படுவது அக்கட்சியின் உண்மை முகத்தைக் காட்டுகிறது. அண்ணாமலையின் மௌனம் மற்ற கட்சிகளில் நடக்கும் சிறு தவறுகளைக் கூடப் பூதாகரமாக்கி வீதிக்கு வந்து போராடும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை, இந்தப் புகார் குறித்து ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும் ஏன் மௌனம் காத்தார்? முன்னாள் அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் அண்ணாமலை ஆகியோரிடம் புகார் அளித்தும், தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணையே காத்திருக்க வைத்தது எந்த விதமான நீதி? சொந்தக் கட்சிப் பெண்ணிற்கே நீதி வழங்கத் துணியாத ஒரு தலைமை, தமிழகப் பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு வழங்கும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலிடத்திற்கு தொடர்பா? புகாரில் குறிப்பிட்டுள்ள மிக அதிர்ச்சிகரமான விஷயம், கரு. நாகராஜன் விடுத்துள்ள மிரட்டல். “கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நான் பல வேலைகளைச்’ செய்து கொடுத்திருக்கிறேன், என்னால் எதையும் செய்ய முடியும்” என்று அவர் கூறியிருப்பது, பாஜகவின் மேலிட நிர்வாகத்திற்கும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இந்த ‘பல வேலைகள்’ என்பது என்ன என்பதை பாஜக தலைமைதான் விளக்க வேண்டும். சொந்தக் கட்சிப் பெண்களுக்கே ‘சிம்மசொப்பனமாக’ இருக்கும் ஒரு நிர்வாகியை வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகச் சொல்வது வேடிக்கையானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இந்தப் புகாரை மூடி மறைக்க முயன்றால், தமிழகப் பெண்கள் வரும் தேர்தலில் பாஜகவிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி! - அ.விஜயகுமார்</p>
