பவானியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்: ஆட்சியர் ஆய்வு
9 Oct 2026, 2:05 am

பவானியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்: ஆட்சியர் ஆய்வு

மேட்டுப்பாளையம், அக்.8-மேட்டுப்பாளையத்தில் பெருக்கெடுத்து ஓடும் பவானியாற்றை நேரில் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், குடிநீர் திட்டங்களின் விநியோக பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் புதனன்று 96 அடியை கடந்த நிலையில், நீர்மின் உற்பத்திக்காக விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.

கனமழையால் ஆற்றில் சேறும் சகதியும் கலந்து வந்ததால், பவானியாற்றின் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிகள் மற்றும் ஊரக குடிநீர் திட்டங்களுக்கான நீரேற்று நிலையங்களில்பொருத்தப்பட்ட மின் மோட்டார்களில் சேறு அடைத்து பழுது ஏற்பட்டது. இதனால் குடிநீர் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டன. சீரமைப்பு பணிகள் முடியும் வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகங்கள் அறிவித்திருந்தன.

இதையடுத்து, வியாழனன்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் சென்று சாமண்ணா நீரேற்று நிலையம், பவானி ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.