தேனீ வளர்ப்பை அச்சுறுத்தும் வண்டு தாக்குதல்
8 Aug 2026, 12:05 am

தேனீ வளர்ப்பை அச்சுறுத்தும் வண்டு தாக்குதல்

கோவை, ஆக.7-தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புத் தொழிலை கடுமையாக பாதிக்கும் புதிய வகை வண்டு மற்றும் அதன் புழுக்களின்தாக்குதல் குறித்து தேனீ வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியும், தேனீ வளர்ப்பாளருமான விவேக், கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்துடன் இணைந்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இதனை முழுநேர தொழிலாக மேற்கொண்டு வரும் அவர், ஆண்டுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருவாய் ஈட்டி, சுமார் ரூ.20 லட்சம் வரை லாபம் பெற்று வந்த நிலையில், கடந்த 10 முதல் 20 நாட்களாக தேனீக் கூடுகளை தாக்கும் ஒரு புதிய வகை வண்டு மற்றும் அதன் புழுக்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த புழுக்கள் தேனீ முட்டைகள், லார்வாக்கள் மற்றும் கூட்டில் சேமிக்கப்பட்டுள்ள உணவுகளை அழித்து விடுகின்றன. மிகக் குறுகிய காலத்திலேயே முழு தேனீ காலனியையும் அழிக்கும் அளவுக்கு இந்த தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. புழுக்களாக இருக்கும் இவை பின்னர் வண்டுகளாக மாறி, ஈரமான மண்ணில் வாழ்ந்து மீண்டும் இனப்பெருக்கம் செய்து அருகிலுள்ள தேனீ கூடுகளுக்கு பரவுவதால் பாதிப்பு பெரியளவில் இருக்கிறது. தனது பண்ணையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட இந்திய நாட்டு தேனீ காலனிகள், 100 இத்தாலிய தேனீ காலனிகள் மற்றும் சுமார் 200 பாரம்பரிய கொசு தேனீ காலனிகள் உள்ளன. இதில் இந்திய நாட்டு தேனீக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய தேனீக்களில்தாக்குதல் குறைவாக இருக்கிறது. இந்திய நாட்டு தேனீக்கள் பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் பல அடுக்கு விவசாய முறைகளில் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகிப்பதாகவும், அவை பாதிக்கப்படுவதால் காய்கறி மற்றும் தானிய உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படப்கூடும்.

தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரம் பேர் நேரடியாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டிகின்றனர். மெழுகு உற்பத்தி, தேனீப் பெட்டி தயாரிப்பு, உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட சில லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் இந்த தொழிலைச் சார்ந்திருக்கிறது.மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான தேன் மற்றும் தேன் சார்ந்த வர்த்தகம் நடைபெறுவதாகவும், இந்த தாக்குதல் தொடர்ந்தால் அந்த துறையும் கடுமையாக பாதிக்கப்படும். என்றார்.

இயற்கை தேன் உற்பத்தி குறைந்தால், கலப்படத் தேன் சந்தையில் அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது. தேனை மருத்துவப் பயன்பாட்டிற்காக நம்பியிருக்கும் மக்களும் பாதிக்கப்படலாம். இந்த பிரச்சினை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் பதிவாகி வருவதாகவும், குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சில ஆராய்ச்சிகளின்படி, தேனீ இனங்கள் முற்றிலும் குறைந்துவிட்டால், பப்பாளி, சப்போட்டா, கொய்யா போன்ற மென்மையான தோல் கொண்டபழங்களையும் இந்த வகை பூச்சிகள் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.

இந்த வண்டின் அறிவியல் பெயர் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சிறிய தேன்கூடு வண்டு என அழைக்கின்றனர். இது தேன்கூட்டிற்குள் நுழைந்து, தேனை சேதப்படுத்தும், மகரந்தத்தை உண்ணும், தேனீ புழுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், கடுமையான தாக்குதலில் முழு தேன்கூட்டையும் அழிக்கக்கூடியது. இந்த வண்டால், பிரான்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ், இத்தாலி, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்த தாக்குதல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் பயனுள்ள தடுப்பு முறைகள் அல்லது மருந்துகள் கண்டறியப்பட்டால் தேனீ இனங்களையும், அவற்றைச் சார்ந்த வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும், என்றார்.

தேனீக்கள் உணவு உற்பத்தி சங்கிலியில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்தப் பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேனீ வளர்ப்பாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.