பரங்கி வெட்டிக்காடு தோழர் எஸ்.துரைசாமி காலமானார்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>பரங்கி வெட்டிக்காடு தோழர் எஸ்.துரைசாமி காலமானார்</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.23- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு, பரங்கி வெட்டிக்காடு தோழர் எஸ்.துரைசாமி(83) வயது முதிர்வால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது மனைவி நீலா ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முகில், செம்மலர் என்ற மகள்களும், சுயம்புலிங்கம் என்ற மகனும் உள்ளனர். மத்திய தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த துரைசாமியின் தந்தை, மதுக்கூர் ஜமீன்தாரின் கங்காணியாக பணியாற்றியவர். மதுக்கூர் ஜமீன்தாரின் அடக்குமுறைகளுக்கு எதிராக தியாகி ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், இங்குள்ள விவசாயிகளை அணி திரட்டிப் போராடினார். கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் போது, துரைசாமியின் குடும்பம் மதுக்கூர் ஜமீன்தாருக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த குடும்பத்தில் இருந்து வந்த பி.எஸ்சி பட்டதாரியான துரைசாமி, ஆங்கிலப் புலமை பெற்றவர். பொதுவுடமை கொள்கையில் ஈர்க்கப்பட்டு, 1978-களில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1981 இல் கட்சியின் ஒரத்தநாடு வட்டச் செயலாளராக இருந்து செயல்பட்டார். அப்போது ஆம்பலாபட்டில் மட்டும் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை, பாப்பாநாடு, ஒரத்தநாடு பகுதிகளுக்கு பரவலாக விரிவுபடுத்திய பெருமை துரைசாமியை சேரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர். இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் கட்சிப் பணியாற்றினார். அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து திங்கட்கிழமை படத்திறப்பு நடைபெற்றது. பாப்பாநாடு டாக்டர் காமராஜ் படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில், ஒரத்தநாடு திமுக முன்னாள் எம்எல்ஏ எம். ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர்கள் ஆர்.சி. பழனிவேலு, கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், எம்.செல்வம், என்.சுரேஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆம்பல் துரை.ஏசுராஜா, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டப் பொருளாளர் அரங்கசாமி, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், வி.சிதம்பரம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
