வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - சிபிஎம் ஆதரவு!
yesterday

வாரம் 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் இந்தியா முழுவதும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“இந்தியா முழுமையும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு இதற்கான வேண்டுகோளை விடுத்திருக்கிறது.

ஒன்றிய அரசின் பாராமுகம்

வாரம் 5 நாள் வேலை என்ற கோரிக்கை தொடர்ந்து வங்கி அதிகாரிகள், ஊழியர் சங்கங்களால் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. 2025 மார்ச் மாதத்தில் வங்கி நிர்வாகமும், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் கூட்டு மகஜரில் கையெழுத்திட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பாக இந்தக் கோரிக்கை உயர்மட்ட பரிசீலனையில் இருக்கிறது, விரைவில் முடிவு காணப்படுமென்று நிதித் துறை செயலாளர் தெரிவித்திருக்கிறார். இரண்டரை ஆண்டுகள் ஆகியும் கூட அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருகிறது. வரையறுக்கப்பட்ட பென்சன் பயன், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர் நிரந்தரம், அவுட்சோர்சிங் முறை ஒழிப்பு, திறன் ஊக்குவிப்பு தொகை என்ற பெயரில் பாரபட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளும் இப் போராட்டத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 11 ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பின்னரும் அரசோ, வங்கி நிர்வாகமோ பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண முன்வராத சூழலில் முறையான அறிவிப்பு தரப்பட்டு இந்த வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்கள்

இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டிய அரசாங்கம் அதிகாரிகளை, ஊழியர்களை அச்சுறுத்துகிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க முனைகிறது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

பேச்சுவார்த்தை தேவை

நாடு முழுமையும் வங்கி சேவைகள் பாதிக்கப்படவுள்ள சூழலில் ஒன்றிய அரசின் இப்பிடிவாதம் ஏற்கத்தக்கதல்ல.ஆகவே, உடனடியாக வங்கி ஊழியர் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.