குமரி மாவட்டம் வழியாக கனிமங்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களுக்குத் தடை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
11 Apr 2026, 5:30 am

குமரி மாவட்டம் வழியாக கனிமங்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களுக்குத் தடை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

நாகர்கோவில், ஏப்.10- கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றிச்செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிமம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த 07.04.2024 அன்று தோவாளை வட்டம் திருப்பதிசாரம் பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சையின் போது ஒருவர் 09.04.2024 அன்று உயிரிழந்ததும் மற்றும் கடந்த 07.04.2024 அன்று கல்குளம் வட்டம் வில்லுக்குறி பகுதியில் விபத்தும் நடைபெற்றுள்ளது.

மேலும் கடந்த 09.04.2024 அன்று இரவு 10 மணிக்கு நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு வாகனம் தக்கலை காவல் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை முதல் செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரில் ஒரு நபர் சிக்கு வாகனத்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக கனிமம் ஏற்றிச் செல்லும் அதிவேக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்களுக்கும் மற்றும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்றாட சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கும், சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக அமைவதாலும், விபத்துக்களைத் தடுத்திடும் பொருட்டும், விபத்தில்லா சாலை போக்குவரத்தை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகிறது.

எனவே பொதுமக்களின் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிமங்களை கனரக வாகனங்களின் மூலம் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.