காணிக்கை திருட்டால் அதிரும் அயோத்தி
yesterday

காணிக்கை திருட்டால் அதிரும் அயோத்தி

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் பண வடிவிலான காணிக்கைகள் பெருமளவில் திருட்டுப் போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கோவிலின் முன்னாள் கணக்காளர் மகிபால் சிங், தனது பணியின்போதே ரூ.5 லட்சம் திருடப்பட்டதாகவும், இது குறித்துப் புகார் அளித்ததாலேயே தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கிடையே, செய்தியாளர்கள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷணிடம் இது பற்றிக் கேட்டபோது, “நான் உண்மையைச் சொன்னால் பெரிய ஆபத்து வரலாம்.

தவறு செய்தவர்கள் மிகப் பெரிய மனிதர்கள், அவர்கள் குறித்துப் பேச எனக்குத் தைரியம் இல்லை” எனக் கூறியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு, அத்வானியின் ரத யாத்திரை, சங்கராச்சாரியார்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மோடி முன்னின்று நடத்திய கோவில் திறப்பு எனப் பல அரசியல் பின்னணிகளைக் கொண்ட இக்கோவிலில், பா.ஜ.க. தலைவரே ஊழலை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியிருப்பது, ராமர் கோவிலில் என்னதான் நடக்கிறது என்ற பலத்த கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சனைக்குச் சுமுக முடிவு ஏற்படாவிட்டால், வரவிருக்கும் தேர்தலில் தங்களின் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் எனப் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மத்தியத் தலைமை கவலை அடைந்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த யோகி ஆதித்யநாத் அரசு, இதனை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. எனினும், பணியில் உள்ள நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். “உலகெங்கும் உள்ள ராம பக்தர்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தி” என அகிலேஷ் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பவன் பாண்டே, நிலக் கொள்முதல் முதலே இந்த ஊழல் தொடர்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க. தலைவர் வினய் கட்டியார், “இதற்காகப் பதவியைத் தியாகம் செய்தோம், ஆனால் இப்போது இருப்பவர்கள் திருடர்கள்” எனச் சீறியுள்ளார். ஆன்மீகத்தை அரசியலுக்கான கருவியாகப் பயன்படுத்திய சங் பரிவாரத்திற்கு, தங்களின் அரசியல் எதிர்காலமே அயோத்தியில் முடியப் போகிறதோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.