வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஊதிய உயர்வு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
3 Mar 2026, 3:38 pm
<p><strong>வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஊதிய உயர்வு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 3- வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், அலு வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கடந்த மூன்று நாட்களாகக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்தம் 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும், 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களும் பணியாற்றி வரு கின்றனர். மின்சார வாரியத்தில் 1.12.2023 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, 26 மாதத் தாமதத்திற்குப் பிறகு தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், வாரியம் வெளியிட்டுள்ள வரைவு ஒப்பந்த நகலில் பிரிவு 1 மற்றும் 2-ன்கீழ் வரும் உயர் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. 1957-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது போல, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் எனப் போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். மின் நிலையத்தின் மூன்றாவது நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் பொறியாளர் கழகத்தைச் சேர்ந்த வி. சம்பத்குமார், முன்னாள் செயலாளர் பாலாஜி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் க. சலீல் குமார், பொறியாளர் அமைப்பின் செயலாளர் ஆடலரசு, இன்ஜினியர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு, ஏஎஸ்யு மாநில செயலாளர் எம். கணேசன், வட்டச் செயலாளர் ஆர். கோதண்டம் மற்றும் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கடையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.</p>
