திருச்சி விரைவு செய்திகள்
3 Nov 2026, 10:09 pm

திருச்சி விரைவு செய்திகள்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு

அரியலூர், நவ.3 -அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் உதவி ஆய்வாளர் தனஞ்ஜெயன் முன்னிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே போதை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு போதையால் ஏற்படும் விளைவுகள், உடல் உபாதைகள், உயிரிழப்புகள் குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவும் சாலை விதிகளை மதித்து அவற்றை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினார். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

உழவர் சந்தைகளில் சனிக்கிழமைதோறும்இயற்கை விளைபொருட்கள் விற்பனை

தஞ்சாவூர், நவ.3 - இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கவும், நஞ்சில்லா உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கவும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தமிழக உழவர்சந்தைகளில் வாரந்தோறும் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம்,கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 உழவர் சந்தைகளிலும் சனிக்கிழமைதோறும் இயற்கை விளைபொருட்களுக்கு தனி கடைகள் ஒதுக்கப்பட உள்ளன.மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை பொருட்கள் விற்பனை செய்யப்படும். இயற்கை விவசாயிகள் அருகிலுள்ள சந்தையில் விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்று பயன்பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தெரிவித்துள்ளார்.