தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

12 Sept 2026, 8:34 pm
அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகின் தெளிவான வானத்தைக் காக்கும் முயற்சியில் வெற்றி - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகின் மிகத் தெளிவான வானம் காணப்படும் சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் அமைந்திருந்த வானியல் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பிரம்மாண்டமான புதிய திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பத்த மில்லியன் டாலர் முதலீட்டில் பசுமை ஹைடிரஜன் மற்றும் அமோனியா வாயுக்களை உற்பத்தி செய்வதற்காக 3,000 ஹெக்டேர் பரப்பில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. இன்னா வசதி என்று அழைக்கப்பட்ட இந்த வளாகத்தில் ஒரு துறைமுகம், கடலோரப் போக்குவரத்துத் தொடர்புகள் மற்றும் மூன்று சூரிய ஆற்றல் நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன. இப்பகுதியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது உலகின் மிக வலிமை வாய்ந்த தொலைநோக்கிகளின் துல்லியத்தன்மையையும் வான் உற்றுநோக்கலையும் வெகுவாகப் பாதிக்கும் என்று விண்வெளியியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.

தரைப்பகுதியில் இருந்து விண்வெளியை உற்றுநோக்கி ஆராயச் சிலியின் அட்டகாமா பாலைவனமே மிகச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், பேரனல் வான் ஆய்வு மையத்திற்கு ஏற்படவிருந்த சரிசெய்ய முடியாத பாதிப்பு வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய தெற்குப் பகுதி உற்றுநோக்கு மையங்களின் பிரதிநிதி இட்ஸைடர் கிரிகோரியோ தெரிவித்துள்ளார். உலகின் மிக முக்கிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றான பாரனல் உற்றுநோக்கல் ஆய்வு மையத்திற்கு அருகில் வெறும் 11.5 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இந்த இன்னா வசதி அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் கடந்த டிசம்பர் 2025-ல் 2020 நோபெல் விருது பெற்ற விஞ்ஞானி ரைன்ஹார்டு ஜென்ஸல் தலைமையில் பல ஆய்வாளர்கள் இணைந்து சிலி அரசுக்குத் திறந்த கடிதம் மூலம் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

விலங்குகளும் குழம்பிப் போய் நிற்கின்றன - சிதம்பரம் இரவிச்சந்திரன்

பஹல்காம் சரிவுகளின் மேற்பகுதியில் இருந்து பார்க்கும்போது மேற்கு இமாலயத்தின் குறுக்கே செல்லும் களஹோய் பனிப்பாறை மெலிந்து, சுருங்கி, சலசலக்கும் பனிப்படலமாகக் காட்சி தருகிறது. ஒருகாலத்தில் தூய வெண்மை நிற நீரை துணை நதிகள், வயல்கள் மற்றும் காடுகளுக்கு வாரி வழங்கிய இந்தப் பனிப்பாறை தற்போது தீவிரமாக உருகிவருவதால், வெறுமையான பாறைகளும் அல்ப்பைன் புல்வெளிப் பிரதேசங்களும் வெளியில் தெரிகின்றன. பல நூற்றாண்டுகளாக நெல் வயல்கள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ தோட்டங்கள் மற்றும் கால்நடைகளின் மேய்ச்சல் பகுதிகளுக்கு நீர் பாய்ச்சி வந்த இந்த நீர் ஆதாரம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதன் அளவு குறைந்துகொண்டிருப்பதால், இதனைச் சார்ந்திருந்த முழு உணவு வலையும் தாறுமாறாக மாறி வருகிறது.

அல்ப்பைன் மலர்கள் முன்கூட்டியே பூப்பதால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குழப்பமடைகின்றன. கஸ்தூரி மான்களும் மலையாடுகளும் தங்கள் மேய்ச்சல் இடங்களை இழந்து தவிக்கின்றன. வேட்டையாடி உண்ண உணவு இல்லாததால் பனிச் சிறுத்தைகள் கிராமங்களின் அருகாமைப் பகுதிகளில் அதிகமாக நடமாடத் தொடங்கியுள்ளன. மாறிவரும் நிலப்பரப்புகளால் விலங்குகளும் குழம்பிப் போய் நிற்பதாக உள்ளூர் மேய்ச்சல்காரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்தே சுருங்கத் தொடங்கிய இந்தப் பனிப்பாறை, கடந்த அறுபது ஆண்டுகளில் தன் கால் பகுதி பரப்பை முழுமையாக இழந்துவிட்டது என்று 2020 செயற்கைக்கோள் படங்கள் மதிப்பிட்டுக் கூறியுள்ளன.

குருவிக்கு ஒரு புது வீடு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சென்னையில் குருவிகளின் எண்ணிக்கையை மீட்டெடுத்து அதிகரிக்கச் செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘கூடுகள்-நெஸ்ட்’ என்ற அறக்கட்டளையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 15,000-த்திற்கும் மேற்பட்ட குருவிக் கூடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நகரில் குருவிகள் மீண்டும் குடியேற ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் கூடுகளை விநியோகித்த இந்தச் செயல்பாடு சென்னையின் ஒட்டுமொத்த சூழலையும் நேர்மறையாக மாற்றியமைத்துள்ளது. சமூகம் மற்றும் பள்ளிகள் இணைந்து செயல்படும் இத்திட்டத்தின் மூலம், குருவிகள் அதிகம் காணப்படும் நகரமாகத் தற்பொழுது சென்னை மாறியுள்ளது. பலவீனமான இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்று ஒரு செயல்திறனுள்ள வளரும் இயக்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கல்வியுடன் இணைந்த சமூகப் பங்காளித்துவம் மற்றும் அறிவியல் ஆய்வுகளை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, நகரங்கள் குருவிகள் வாழும் உகந்த இடங்களாக மாற்றவும், இளம் தலைமுறையினரை ஆர்வமுடன் சூழல் பாதுகாப்பில் பங்கேற்கச் செய்யவும் பெரிதும் வகை செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட இந்த குருவிக் கூடுகள் மாணவர்களுக்கு நேரடி மாதிரி வகுப்பறைகளாக மாறி, இயற்கையின் பாடங்களைச் செய்முறை அனுபவத்துடன் கற்றுத் தந்துள்ளன. இத்திட்டம் புவியியல் ரீதியாக விரிவடைந்து மாநிலத்தின் பத்து மாவட்டங்களில் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் நேரடிப் பயனாக வட சென்னையில்மட்டும் குருவிகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.