நாம் நாகரிக சமூகமா!
20 Mar 2026, 2:55 pm

நாம் நாகரிக சமூகமா!

நவீன இந்தியாவின் டிஜிட்டல் சாதனைக ளையும், விண்வெளிப் பாய்ச்சல்களையும் நாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாடினாலும், பாதாளச் சாக்கடைகளிலும் கழிவுநீர்த் தொட்டி களிலும் மனித உயிர்கள் பலியாவது ஒரு தீராத வேதனையாகத் தொடர்கிறது. சமீபத்தில் மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்களின்படி 2017 முதல் இந்தியா முழுவதும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது 622 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் இதயத்தை உலுக்குகிறது. இதில் உத்தரப்பிரதேசம் (86), மகாராஷ்டிரா (82), தமிழ்நாடு (77), ஹரியானா (76) என உயிரிழப்புகளின் பட்டியல் நீள்கிறது.

துப்புரவுப்பணி என்பது சாதி சார்ந்தது அல்ல, அது தொழில் சார்ந்தது என்று ஆட்சியா ளர்கள் கூறினாலும், கள யதார்த்தம் முற்றிலும் வேறாகவே உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் மறுப்பு, ஊதிய நிலுவை மற்றும் அப்பட்டமான சாதி ரீதியான பாகுபாடு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப் பட்டுள்ள 842 புகார்கள், இந்தத் தொழிலாளர்க ளின் பாதுகாப்பற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையை அம்பலப்படுத்துகின்றன.

மிகவும் வேதனையான விஷயம் என்ன வென்றால், 2013 மற்றும் 2018-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கைகளால் மலம் அள்ளும் 58,098 தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட நிலை யில், தற்போதைய புதிய ஆய்வில் நாட்டில் அத்தகைய தொழிலாளர்களே இல்லை என்று ஒன்றியஅரசு கூச்சமின்றி அறிவித்துள்ளது. இது புள்ளிவிவர மோசடி அன்றி வேறில்லை. தலித் ஆதிவாசி உரிமைக்கான தேசிய மேடை போன்ற சமூக அமைப்புகளோ 2024, 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் முறையே 116 மற்றும் 158 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறு கின்றன. அரசுத் தரவுகளுக்கும் உண்மை நிலைக் கும் இடையே உள்ள இந்த மிகப்பெரிய இடை வெளி, அதிகார வர்க்கத்தின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் நிர்வாகம் காட்டும் மெத்தனம் மன்னிக்க முடியாதது. 52 குடும்பங்க ளுக்கு இதுவரை ஒரு பைசா கூட இழப்பீடு கிடைக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். உச்சநீதிமன்றம் பலமுறை சாடிய பின்னரும், இயந்திரமயமாக்கல் திட்டம் கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதிகார வர்க் கத்தின் இந்தத் தொடர் அலட்சியப்போக்கு என்பது வெறும் விபத்தல்ல, இது ஏழைத் தொழி லாளர்களின் உயிரோடு விளையாடும் ஒரு நிர்வாகக் கொலையாகும்.

அறிவியல் யுகத்தில் வாழ்ந்துகொண்டு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த மனிதாபிமானமற்ற அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காத வரை, நாம் ஒரு நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ளவே தகுதி யற்றவர்கள்.